

பனப்பாக்கம்,
பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்த மாணவிகள் சங்கரி, மனிஷா, ரேவதி, தீபா ஆகியோர் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமலிங்கம் நேற்று வந்தார். அவர் மற்றும் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாவட்ட கல்வி அலுவலர் அமுதா ஆகியோர் பள்ளியில் சுமார் 2 மணி நேரம் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் தற்கொலை செய்து கொண்ட மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் போலீசாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-
பனப்பாக்கத்தில் நடந்த இச்சம்பவம் இனி தமிழகத்தில் எந்த பள்ளியிலும் நடக்கக்கூடாது. தமிழகத்தில் குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க ஒரு ஆணையம் உள்ளது. இந்த ஆணையத்தை நிறைய பேர் அணுகுவது இல்லை. குழந்தைகளுக்கு கல்வி, பொருளாதார உதவி மற்றும் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களை கொடுமைப்படுத்துகிறார்களா? பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையா? அடிப்படை வசதிகள் இல்லையா? என்பது குறித்து எங்களிடம் புகார் தெரிவிக்கலாம்.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தை 04426421359 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இந்த எண்ணில் மாணவ-மாணவிகள் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரும் புகார் அளிக்கலாம். இந்த தொலைபேசி எண் 24 மணி நேரமும் செயல்படும். மேலும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி உள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியை 0416-2222310 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகளின் சாவுக்கு காரணமாக யாராக இருந்தாலும், அவர்கள் மீது நீதி விசாரணை நடத்தப்பட்டு, அதன் மூலம் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். இதற்கு தேவையான நடவடிக்கையை தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் எடுக்கும். தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகளின் 10-ம் வகுப்பு வருகை பதிவேடுகளை சோதனை செய்ததில், அவர்கள் அனைவரும் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்துள்ளனர். மேலும் அவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதனால் மாணவிகள் மீது தவறுகள் இருக்க வாய்ப்பு மிக, மிக குறைவாகும்.
குழந்தைகளுக்கு புரியாத கல்வியை கொடுத்து, மாணவ-மாணவிகளிடம் அதிகம் எதிர்பார்ப்பது, இதுபோன்ற தவறான முடிவுகளுக்கு காரணமாக அமைகிறது. குழந்தைகளுக்கு நிறைய திறமைகள் உள்ளன. படிப்பு என்பதும் ஒரு திறமை தான். படிப்பை தவிர நிறைய திறமைகள் உள்ளன. அந்த திறமைகளை வளர்க்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்தி சரியான பாதையில் செல்ல அவர்களை நாம் நெறிப்படுத்த வேண்டும்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களை தங்கள் குழந்தைகளை போன்று கருத வேண்டும். பெற்றோர், குழந்தைகளுக்கு முதல் ஆசிரியர். ஆசிரியர்கள், குழந்தைகளின் 2-வது பெற்றோர். இதுபோன்று குழந்தைகளை வழிநடத்த வேண்டும். தற்போது இந்த 4 மாணவிகளின் தற்கொலை தொடர்பாக முதற்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளோம்.
மேலும் இப்பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தை முன்னுதாரணமாக கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தொலைபேசி எண் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி எண் வைக்கப்படும். இதன் மூலம் மாணவர்களின் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். மேலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஆலோசனை கொடுக்க கல்வி உளவியலாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்கள் மூலம் வழிகாட்டுதல் மையம் அமைக்க மாவட்ட கல்வி அலுவலருடன் ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.