4 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் இருப்பு

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 4 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
4 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் இருப்பு
Published on

திண்டுக்கல்:

கொரோனாவின் 2-வது அலையால் நாடு முழுவதும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை இந்நோய் தொற்றுக்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 200 படுக்கைகள் கொண்ட தனி சிகிச்சை பிரிவும், எம்.வி.எம்.மகளிர் கலைக்கல்லூரியில் 160 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையமும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அமைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, கொரோனா தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் ஆக்சிஜன் தேவை என்பது முக்கிய பங்காக உள்ளது.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் வடமாநிலங்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இதுபோன்ற நிலைமையை தவிர்க்க, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் போதிய அளவு கையிருப்பில் வைத்துக்கொள்ள அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது.

இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை டீன் விஜயகுமார் கூறும்போது, மருத்துவமனையில் 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் இருப்பு வைத்துக்கொள்ளும் அளவுக்கு கொள்கலன் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர நவீன பிரசவ சிகிச்சை பிரிவில் 300 லிட்டர் ஆக்சிஜன் இருப்பு வைத்துக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவமனையை பொறுத்தவரை ஒரு மாதத்துக்கு 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் தேவைப்பட்டது.

ஆனால் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் வாரம் ஒரு முறை 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

அதனை நாங்கள் திருச்சியில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஆக்சிஜனும் தற்போது தடையில்லாமல் கிடைத்து வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு 6 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்பட்டது.

நோயாளிகளுக்கு பயன்படுத்தியது போக தற்போது 4 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com