

திருச்சி,
இந்திய விமானபடையில் ஏர்மேன் பணிக்கு ஆள் சேர்ப்பதற்கான முகாம் திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் கடந்த 20-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. முதல் நாள் நடந்த முகாமில் திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கிருஷ்ணகிரி, மதுரை, விழுப்புரம், நெல்லை, சேலம், நாகை, புதுகை, கடலூர், திருவாரூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி, காரைக்காலில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் அளத்தல், எழுத்துத்தேர்வு ஆகியவை நடத்தப்பட்டது. இதில் தேர்வானவர்களுக்கு நேற்று முன்தினம் ஓட்டப்பந்தயம், தண்டால் எடுத்தல் போன்ற தேர்வுகளும் நடத்தப்பட்டன. இதில் 182 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
4 ஆயிரம் இளைஞர்கள்
இந்தநிலையில் நேற்று 2-வது கட்டமாக நடந்த முகாமில் வேலூர், கன்னியாகுமரி, தேனி, தஞ்சை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், திண்டுக்கல், பெரம்பலூர், தர்மபுரி, கோவை, காஞ்சிபுரம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு, அரியலூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரம் இளைஞர்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, உயரம் அளத்தல், எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் தேர்வானவர்களுக்கு அடுத்த கட்ட தகுதி தேர்வு இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்த ஆள்சேர்ப்பு முகாமையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.