கடந்த 78 நாட்களில் 4 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்தது: பூண்டி ஏரியில் 80 சதவீதம் நீர் நிரம்பியது

பூண்டி ஏரிக்கு கடந்த 78 நாட்களில் 4 டி.எம்.சி. நீர் வந்தடைந்ததால், ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது. இதனால் பூண்டி ஏரி 80 சதவீதம் நீர் நிரம்பி காட்சி அளிக்கிறது.
கடந்த 78 நாட்களில் 4 டி.எம்.சி. தண்ணீர் வந்தடைந்தது: பூண்டி ஏரியில் 80 சதவீதம் நீர் நிரம்பியது
Published on

ஊத்துக்கோட்டை,

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.10 டி.எம்.சி.ஆகும்.

இதில் பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி பெறப்படும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.

இந்த நீர் தேவைப்படும்போது புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு மற்றும் பேபி கால்வாய்கள் வழியாக திறந்து விடப்படுவது வழக்கம். மேலும் சென்னை குடிநீர் வாரியத்துக்கும் தண்ணீர் அனுப்பப்படுகிறது.

இந்த நிலையில், கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த ஜூன் 16-ந் தேதி முதல் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பூண்டி ஏரியின் உயரம் கிடுகிடு என்று உயர்ந்து வருகிறது.

2.568 டி.எம்.சி. இருப்பு

இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 33.16 அடியாக பதிவாகியது. இந்த ஏரியில் 3.231 டி.எம்.சி.தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது 2.568 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது ஏரியின் மொத்த கொள்ளளவில் 80 சதவீதம் ஆகும்.

கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி முதல் நேற்று காலை வரை 78 நாட்களில் பூண்டி ஏரிக்கு 4.060 டி.எம்.சி. தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஏரிக்கு கிருஷ்ணா நீர் வினாடிக்கு 551 கனஅடியாக வந்து கொண்டிருந்தது.

அதேபோல் மழைநீர் வினாடிக்கு 198 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது. பூண்டியில் இருந்து இணைப்பு கால்வாய் வழியாக புழல் ஏரிக்கு வினாடிக்கு 328 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.

பேபி கால்வாய் வழியாக சோழவரம் ஏரிக்கு வினாடிக்கு 50 கனஅடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 9 கனஅடி தண்ணீரும் திறந்துவிடப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com