கொடைக்கானல் அருகே 4 வாலிபர்கள் காரில் கடத்தல் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

கொடைக்கானல் அருகே கேரள வாலிபர்கள் 4 பேரை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கொடைக்கானல் அருகே 4 வாலிபர்கள் காரில் கடத்தல் ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது
Published on

கொடைக்கானல்,

கேரள மாநிலம் திருச்சூர் கோலம்காட்டுகரா பகுதியை சேர்ந்தவர்கள் பினோஜ் (வயது 28), அபிஷேக் (28), ஸ்ரீராக் (25), விஷ்ணு (25). இவர்கள் 4 பேரும் கொடைக்கானல் தாலுகா பள்ளங்கி கோம்பை என்ற இடத்தில் உள்ள பினோஜின் அக்காள் தீபா என்பவரின் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று காலை இந்த பகுதிக்கு சுற்றுலா வருவது போல் சிலர் வந்தனர். அவர்கள் பினோஜ் மற்றும் 3 பேரிடம் பேசி, எங்களுடன் வந்தால் உங்களுக்கு நல்ல வேலை வாங்கித்தருவோம் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்களை மூளைச்சலவை செய்வது போல் பேசி நைசாக தாங்கள் வந்த காரில் ஏற்றி தேனிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு சென்றவுடன் அவர்களை வலுக்கட்டாயமாக காரிலேயே அடைத்து வைத்துவிட்டு பள்ளங்கி கோம்பையில் உள்ள பினோஜின் அக்காள் தீபாவிற்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அதில் பினோஜ் மற்றும் அவர்களுடன் உள்ளவர்களை தாங்கள் கடத்தி வைத்துள்ளதாகவும் அவர்களை மீட்க வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் தர வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதுபற்றி தீபா கொடைக்கானல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தீவிரமாக துப்புத்துலக்கி கடத்தல்காரர்கள் பதுங்கி இருந்த வத்தலக்குண்டு அருகே உள்ள காட்ரோடு பகுதியில் அவர்களை சுற்றிவளைத்தனர். போலீசாரை கண்டவுடன் அனைவரும் தப்பி ஓடினர். இதில் உசிலம்பட்டி வடுகப்பட்டியை சேர்ந்த பிரேம் குமார் (23), அதே பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (36) ஆகியோர் போலீசாரின் பிடியில் சிக்கினர். மற்ற 4 பேர் தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து கடத்தப்பட்ட 4 கேரள வாலிபர்களையும் போலீசார் மீட்டனர். பின்னர் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம்குமார், ராஜபாண்டி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கொடைக் கானல் பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com