தொழுநோய் பாதித்தவர்களை கண்டறிய 40 நடமாடும் மருத்துவ குழு

வேலூர், நாட்டறம்பள்ளி ஒன்றியங்களில் தொழுநோயால் பாதித்தவர்களை கண்டறிய 40 நடமாடும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொழுநோய் பாதித்தவர்களை கண்டறிய 40 நடமாடும் மருத்துவ குழு
Published on

வேலூர்,

மைக்ரோ பாக்டீரியம் லெப்ரே எனும் கிருமி தாக்குவதால் மனிதனுக்கு தொழு நோய் ஏற்படுகிறது. இந்த நோய் தோல் மற்றும் நரம்புகளை பாதிக்கக்கூடியது. இந்த நோய் குறித்துப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதன்படி வேலூர் மாவட்டத்தில் தற்போது வேலூர், நாட்டறம்பள்ளி ஆகிய ஒன்றியங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.

இது குறித்து வேலூர் மாவட்ட மருத்துவப்பணிகள் துணை இயக்குனர் (தொழுநோய்) அப்சல்அலி கூறியதாவது:-

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு இந்த நோய் பரவுவதால் சமூகத்தில் அவர்களை ஒதுக்கி வைக்கும் நிலை ஏற்படுகிறது. தோலில் உணர்ச்சியற்ற தேமல் போன்று ஏற்படுவது இந்நோயின் அறிகுறியாகும். சிறிய அளவிலான தேமல் நாளடைவில் உடல் முழுவதும் பரவும். இந்த நோய் குறித்து வேலூர் மாவட்ட மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஒன்றியங்கள் வாரியாக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. தற்போது வேலூர் சுகாதார மாவட்டம் சார்பில் வேலூர், நாட்டறம்பள்ளி ஆகிய ஒன்றியங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தொழுநோய் குறித்துக் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த முகாம்கள் மூலம் மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து அவர்களை சிகிச்சைக்கு உட்படுத்துகிறோம். பள்ளிகளிலும் முகாம்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாணவர்களையும் பரிசோதனை செய்து வருகிறோம். இதற்காக வேலூர் மாவட்டத்தில் 40 நடமாடும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் குக்கிராமங்களுக்கும் சென்று முகாம்கள் நடத்துவார்கள். கடந்த ஆண்டு 174 பேருக்கு தொழுநோய் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 12 பேருக்கு தொழுநோயால் பாதிக்கப்பட்ட உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஊட்டச்சத்துக்காக தலா ரூ.8 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. 450 பேருக்கு சிறப்பு காலணிகள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் வேலூர் மாவட்டத்தில் 45 பேருக்கு தொழுநோயின் ஆரம்ப நிலை அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com