சென்னை துறைமுக ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை வழக்கில் திருப்பம்: 4 கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி, ரூ.9 ஆயிரம் மட்டும் திருடுபோனது அம்பலம்; பொய் புகார் கூறியவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்

ஜமீன் பல்லாவரத்தில், சென்னை துறைமுக ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை போனதாக கூறப்பட்ட வழக்கில், நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு கூடுதல் நகை, பணம் திருட்டு போனதாக துறைமுக ஊழியரே பொய் புகார் அளித்தது தெரிந்தது. அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
சென்னை துறைமுக ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை வழக்கில் திருப்பம்: 4 கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி, ரூ.9 ஆயிரம் மட்டும் திருடுபோனது அம்பலம்; பொய் புகார் கூறியவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்
Published on

துறைமுக ஊழியர்

சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரம், திரு.வி.க. தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 43). இவர், சென்னை துறைமுகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். வீட்டின் மாடியில் உள்ள அறையை பூட்டிவிட்டு கீழ்தளத்தில் குடும்பத்தினருடன் படுத்து தூங்கினார்.

மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மாடி அறையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 40 பவுன் தங்க நகைகள், 3.5 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக பல்லாவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருந்தார்.

3 பேர் கைது

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக பல்லாவரம், குளத்துமேடு 5-வது தெருவை சேர்ந்த கார்த்திக் என்ற மொட்டை கார்த்திக் (22), ஜமீன்பல்லாவரம், பாரதி நகர் பிரதான சாலையை சேர்ந்த சஞ்ஜய் என்ற குட்டிப்புலி (19) மற்றும் பல்லாவரம் அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் 16 வயது மாணவர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், கோபாலகிருஷ்ணன் வீட்டில் இருந்து உண்மையிலேயே 4 கிராம் தங்கம், 20 கிராம் வெள்ளி மற்றும் ரூ.9 ஆயிரத்தை மட்டும் திருடியதாக தெரிவித்தனர்.

எச்சரித்து அனுப்பினர்

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், இதுபற்றி வீட்டின் உரிமையாளர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டனர். அதற்கு அவர் முன்னுக்குபின் முரணாக கூறினார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில், துறைமுக ஊழியரே நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு கூடுதல் நகை, பணம், வெள்ளி பொருட்கள் திருட்டு போனதாக பொய் புகார் அளித்தது தெரிந்தது. அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

பின்னர் கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறுவனை செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு மையத்திலும், மற்ற இருவரையும் புழல் சிறையிலும் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com