டெல்டா மாவட்டங்களுக்கு 4,867 விவசாய மின் இணைப்பு; மின் உற்பத்தி கழக இயக்குனர் தகவல்

காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு 4,867 விவசாய மின் இணைப்புகள் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குனர் ஹெலன் தெரிவித்துள்ளார்.
டெல்டா மாவட்டங்களுக்கு 4,867 விவசாய மின் இணைப்பு; மின் உற்பத்தி கழக இயக்குனர் தகவல்
Published on

தஞ்சாவூர்,

தமிழகத்தில் இலவச விவசாய மின் இணைப்புகள் கேட்டு பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதற்கிடையில் கடந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் தமிழக முதல்-அமைச்சர் நடப்பாண்டு 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவித்தார்.

இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் முதல்வர் அறிவித்தபடி விவசாய மின் இணைப்புகளை துரிதமாக வழங்க வேண்டும் என கோரி விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை கடந்த சில மாதங்களாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் இயக்குனர் ஹெலன் கடந்த ஜூலை 1-ந் தேதி 50 ஆயிரம் மின் இணைப்புகள் தமிழகம் முழுவதும் வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இதில் 25 ஆயிரம் இணைப்புகள் தட்கல் திட்டத்திலும், 25 ஆயிரம் இணைப்புகள் பதிவு மூப்பு மற்றும் சுயநிதி விருப்ப திட்டத்தின் கீழும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 31-3-2003 வரை பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு பதிவு மூப்பு அடிப்படையிலும், தட்கல் திட்டத்திலும், சுய விருப்ப நிதி திட்டத்தின் கீழும் மின் இணைப்புகள் வழங்கப்படும்.

அதன்படி திருச்சி மண்டலத்துக்குட்பட்ட பெரம்பலூர் மாவட்டத்துக்கு 1,527, திருச்சி 602, கரூர் 373, புதுக்கோட்டை 1,106, தஞ்சாவூர் 950, திருவாரூர் 256, நாகை 51 என மொத்தம் 4,867 மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள மின்வாரிய பொறியாளர்கள் விவசாய மின் இணைப்புகள் வழங்குவதற்கான பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com