

கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே உள்ள இளையரசனேந்தல் சாலையில், நேற்று காலை பாரதிய கிசான் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் வக்கீல் ரெங்கநாயகலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜேசுநாயக்கர், இளையரசனேந்தல் முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், இளையரசனேந்தல் உள்பட 12 பஞ்சாயத்துகளை கோவில்பட்டி தாலுகாவுடன் இணைக்க கோரி கோஷம் எழுப்பினர். சங்க ஒன்றிய தலைவர் ஜெயராமன், துணை தலைவர் நல்லையா, மாவட்ட மகளிர் அணி தலைவி கிருஷ்ணம்மாள், இளையரசனேந்தல் பாரதி மக்கள் இயக்க தலைவர் ரவிசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் போராட்டம் நீடித்தது. இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 49 பேரை போலீசார் கைது செய்து, அந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.