

பெங்களூரு:
விவசாயி கொலை
துமகூரு மாவட்டம் கொரட்டகெரே அருகே பன்னேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சென்னிக ராயப்பா, விவசாயி. இவரது முதல் மனைவி யசோதா. இந்த தம்பதியின் மகன் நிகில் (வயது 22). சென்னிக ராயப்பா தனது முதல் மனைவியான யசோதாவை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டார். அதன்பிறகு, அவர் பன்னேனஹள்ளி கிராமத்தில் வசித்து வந்தார். மேலும் அவர் வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.
இதன் காரணமாக பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் அருகே காரேபாவி பாளையாவில் கடந்த 20 ஆண்டுகளாக தனது மகன் நிகிலுடன் யசோதா வசித்து வருகிறார். இதற்கிடையில், பெங்களூரு புறநகர் மாவட்டம் பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உடப்ட்ட பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கடந்த மாதம் (ஜனவரி) ஒரு நபர் பாதி எரிந்த நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து பன்னரகட்டா பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மனைவி, மகன் கைது
அந்த நபர் யார்?, அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்த நபர், துமகூரு மாவட்டம் கொரட்டகெரே அருகே பன்னேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த சென்னிக ராயப்பா என்று உடல் அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து, அவரை கொலை செய்த மர்மநபர்களை குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது சென்னிக ராயப்பாவுக்கும், அவரது முதல் மனைவிக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து, சென்னிக ராயப்பாவின் முதல் மனைவி யசோதா, அவரது மகன் நிகிலை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது தனது கணவரை மகனுடன் சேர்ந்து கொலை செய்ததை யசோதா ஒப்புக் கொண்டா. அதைத்தொடர்ந்து, யசோதா, அவரது மகன் நிகில், இந்த கொலைக்கு உதவியதாக குருராஜ் (21), விஷ்வாஸ் (20), மஞ்சுநாத் (29) ஆகிய 5 பேரையும் பன்னரகட்டா போலீசார் கைது செய்துள்ளனர்.
சொத்து பிரச்சினை
விசாரணையில், யசோதாவை பிரிந்து வாழ்ந்த சென்னிகராயப்பா 2-வது திருமணம் செய்து கொண்டு இருந்தார். அவருக்கு 21 குன்டே நிலம் இருந்துள்ளது. அந்த நிலத்தை நிகில் பெயருக்கு எழுதி கொடுக்கும்படி யசோதா வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதே நேரத்தில் தனக்கு சொந்தமான நிலத்தை யசோதாவுக்கு கொடுக்காமல், அதனை விற்பனை செய்ய சென்னிகராயப்பா முயற்சி செய்துள்ளார். இதுபற்றி யசோதாவுக்கு தெரியவந்துள்ளது.
உடனே மகன் மூலமாக சென்னிகராயப்பாவை கொரட்டகெரேயில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வந்துள்ளனர். அவரிடம் சொத்தை எழுதி கொடுக்கும்படி கேட்டுள்ளனர். அவர் மறுத்து விட்டதால், நிகில் தனது நண்பர்களுடன் சேர்ந்து சென்னிக ராயப்பாவை பன்னரகட்டாவுக்கு அழைத்து சென்று கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, உடலை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. கைதான யசோதா, அவரது மகன் நிகில் உள்பட 5 பேர் மீதும் பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.