

தேனி:
ஆர்ப்பாட்டங்கள்
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் கடந்த சில வாரங்களாக குறைந்துள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அவற்றை பின்பற்றாத கடைகள், நிறுவனங்களுக்கு சீல் வைக்கவும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று வந்தனர். அவற்றில் பலரும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
அதன்படி கலெக்டர் அலுவலகம் முன்பு சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழகம் முழுவதும் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்திய பின்னர் இடஒதுக்கீடு வழங்குவதை மறுவரையறை செய்ய வேண்டும், அதுவரை 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது சிலர் கண்களை கட்டிக் கொண்டும், சிலர் மண் பானையை கையில் வைத்துக் கொண்டும் கோஷங்கள் எழுப்பினர்.
தே.மு.தி.க.
தே.மு.தி.க. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகராஜா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
அதுபோல் வனவேங்கைகள் கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வடவீரநாயக்கன்பட்டியில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் சமுதாய வேறுபாடு தெரியாமல் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ததை மறுபரிசீலனை செய்து, தமிழர் தொல்குடியான குறவர் இன மக்களுக்கு போதிய அளவில் குடியிருப்புகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
குடம், பாத்திரங்களுடன் குடியேறும் போராட்டம் என்ற பெயரில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பொதுச்செயலாளர் உலகநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
தீண்டாமை ஒழிப்பு முன்னணி
சாதிய வன்மத்தோடு செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதற்கு மாவட்ட செயலாளர் தர்மர் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அதுபோல், ஆதித்தமிழர் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை நிலைய செயலாளர் விஷ்வைகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.