இளைஞர்களின் ஒற்றுமைக்கு 5 மந்திரங்கள் - கவர்னர் கிரண்பெடி அறிவுரை

இளைஞர்களின் ஒற்றுமைக்கு 5 மந்திரங்களை கூறி அவற்றை பின்பற்ற வேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.
இளைஞர்களின் ஒற்றுமைக்கு 5 மந்திரங்கள் - கவர்னர் கிரண்பெடி அறிவுரை
Published on

புதுச்சேரி,

புதுச்சேரிக்கு நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்த 200 மாணவ, மாணவிகள் வந்துள்ளர். நேரு யுவகேந்திரா சார்பில் நடத்தப்பட்ட இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொண்டனர். வருகிற 25-ந்தேதிவரை புதுவையில் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழா அதிதி ஓட்டலில் நேற்று நடந்தது. நேரு யுவகேந்திரா தமிழ்நாடு-புதுச்சேரி மாநில இயக்குனர் நடராஜ் வரவேற்று பேசினார். குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை கவர்னர் கிரண்பெடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-

நான் எனது இளமைப்பருவத்தில் நேரு யுவகேந்திராவின் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். நமது நாட்டை வலிமையானதாக உருவாக்கிட இளைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இதற்காக அவர்களுக்கு 5 மந்திரங்களை சொல்ல விரும்புகிறேன்.

முதலில் நாட்டை தூய்மையுடன் பராமரிக்கவேண்டும். நம்மிடையே இருந்தும், வீட்டிலேயும் வெளியேயும் தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும். வீட்டில் உள்ள கழிவறைகளை தூய்மையாக பராமரிக்கவேண்டும். பொது இடங்களை கழிவறைகளாக பயன்படுத்தக் கூடாது.

2-வதாக நாட்டின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஆண், பெண் என இருவருக்கும் உள்ளது. இதில் ஒவ்வொருவரின் பாதுகாப்பினையும் உறுதி செய்து மரியாதை செலுத்துதல் அவசியமானது. பொது சொத்து என்பது நமது சொத்து. அதை சேதப்படுத்துவது என்பது தவறானது.

3-வதாக கல்வியை தேர்வுக்காக மட்டும் பயன்படுத்தக்கூடாது. கற்றுக்கொண்டதை வாழ்நாள் முழுவதும் பின்பற்றவேண்டும். கல்வியின் மூலமே நமது நடத்தை குறித்த விவரங்கள் தெரியவரும். குறிப்பாக தலையை அறிவுக்கும், இதயத்தை அன்புக்கும், கைகளை திறனுக்கும் என பிரித்து கற்றறிதல் அவசியம்.

4-வதாக நமது நாகரிகத்தை போற்றுதல் அவசியம். நம் பண்டைய கலாசாரத்தை அறிந்து போற்றுங்கள். இயற்கையை நேசித்தல், வணங்குதல் தொடங்கி நமது பழங்கால பழக்கவழக்கங்களை அறிந்து நோக்கிட வேண்டும்.

5-வதாக ஆரோக்கியமாக இருங்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிறப்பாக செயல்பட முடியும். அதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம். அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு சமூகப்பணியாற்ற வேண்டும்.

தூய்மை இந்தியா திட்டமானது இந்தியா முழுமைக்குமான திட்டமாகும். இது எந்த அரசியல் கட்சிக்கான திட்டமும் அல்ல. எனவே இந்த திட்டத்தை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது.

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி பேசினார்.

விழாவில் முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., துணை கலெக்டர் சஷ்வத் சவுரப், நேரு யுவகேந்திராவின் தேசிய துணைத் தலைவர் விஷ்ணுவர்தன் ரெட்டி, தமிழ்நாடு-புதுச்சேரி துணை இயக்குனர் பிரசன்னா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முடிவில் நேரு யுவகேந்திராவின் புதுவை ஒருங்கிணைப்பாளர் தெய்வசிகாமணி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com