திருத்தங்கலில் பயங்கரம் வாளால் வெட்டி வாலிபர் கொலை - 5 பேர் கைது

திருத்தங்கலில் வாலிபரை வாளால் வெட்டியும் கல்லால் தாக்கியும் கொடூரமாக கொன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருத்தங்கலில் பயங்கரம் வாளால் வெட்டி வாலிபர் கொலை - 5 பேர் கைது
Published on

திருத்தங்கல்,

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சுக்குவார்பட்டி ரோடு பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் முத்துக்குமார்(வயது26). இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த சிவக்குமார்(20) என்பவருக்கும் சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு இருக்கிறது. அப்போது சிவக்குமாரை முத்துக்குமார் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முத்துக்குமார் வண்ணான்குளம் பகுதியில் அதேபகுதியை சேர்ந்த சுந்தரபூபதி(26), மாயக்கண்ணன்(22), அர்ஜூன்குமார்(21), பாலகிருஷ்ணன்(23) ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தினார். அப்போது சிவக்குமார்அங்கு வந்ததாக தெரிகிறது.

அப்போது முத்துக்குமாரை சிவக்குமார் தாக்கிய பிரச்சினை வெடித்தது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரபூபதி உள்ளிட்ட 5 பேரும் முத்துக்குமாரை கல்லால் தாக்கியுள்ளனர். மேலும் சுந்தரபூபதி வாளால் வெட்டியுள்ளார். இதில் முத்துக்குமார் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நேற்று காலை போலீசாருக்கு தெரியவந்தது. திருத்தங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொலை தொடர்பாக சுந்தரபூபதி, மாயக்கண்ணன், பாலகிருஷ்ணன், சிவக்குமார் மற்றும் அர்ஜூன்குமார் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டார்கள்.

கொலை செய்யப்பட்ட முத்துக்குமார் மீது 18 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சுந்தரபூபதி மீதும் 3 வழக்கு இருப்பதாக தெரிவித்தார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com