குடியாத்தம் அருகே பாலிஷ் செய்வதாக கூறி பெண்ணிடம் 5¼ பவுன் நகை அபேஸ் - போலீசார் விசாரணை

குடியாத்தம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நயவஞ்சகமாக பேசி நம்ப வைத்த மர்மநபர்கள் 2 பேர் பாலிஷ் செய்வதாக கூறி 5¼ பவுன் நகையை அபேஸ் செய்து விட்டு சென்றுள்ளனர்.
குடியாத்தம் அருகே பாலிஷ் செய்வதாக கூறி பெண்ணிடம் 5¼ பவுன் நகை அபேஸ் - போலீசார் விசாரணை
Published on

குடியாத்தம்,

தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு இடங்களில் நகை பாலிஷ் செய்வதாக கூறி மோசடி கும்பல் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நகைகளை பறித்துச்சென்றது. இது குறித்து போலீசார் பல்வேறு வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்திய நிலையில் அதுபோன்று நகை பாலிஷ் செய்வதாக கூறி வந்த வடமாநிலத்தை சேர்ந்த பலரை பொதுமக்களே பிடித்துக்கொடுத்தனர்.

அதன்பிறகு இந்த கும்பலின் நடமாட்டம் குறைந்தது. இந்த நிலையில் விழிப்புணர்வுடன் இருந்தவரையும் நம்ப வைத்து பேசிய மர்ம நபர்கள் 2 பேர் நகையை அபேஸ் செய்து சென்ற சம்பவம் குடியாத்தம் அருகே நடந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்தையொட்டிய தமிழக பகுதியில் கொட்டமிட்டா என்ற கிராமம் உள்ளது. இந்த ஊரை சேர்ந்த நவநீதம் அம்மாள் (வயது 55) நேற்று முன்தினம் காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க 2 பேர் அவரது வீட்டிற்கு வந்தனர். அவர்கள் நகைகளை பாலிஷ் செய்து தருவதாக கூறினர். நவநீதம் அம்மாள், அவர்களை நம்பவில்லை.

இங்கு பாலிஷ் செய்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் போய் வாருங்கள் என்று கூறியுள்ளார். அப்போது வீட்டின் வெளியே ஒரு பாத்திரம் இருந்தது. இதனை பாலிஷ் செய்து தருகிறோம். நீங்கள் பணம் எதுவும் தர வேண்டாம் என கூறி பாத்திரத்தை எடுத்து ஒரு திரவத்தை தண்ணீரில் கலந்து பாலிஷ் செய்தனர்.

பின்னர் நகைகளை எடுத்து வந்தால் அதனையும் பணம் வாங்காமல் நாங்கள் பாலிஷ் செய்கிறோம் என்றனர். இதுவே போதும், பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என நவநீதம் அம்மாள் அவர்களிடம் கூறினார். ஆனால் நாங்கள் ஏமாற்றி விடுவோம் என நினைக்கிறீர்களா? நாங்களா அப்படி செய்வோம் என கேட்கவே நவநீதம் அம்மாள் அப்படியெல்லாம் இல்லை என கூறினார்.

பின்னர் நம்மிடம் கோபித்துக்கொள்வார்களோ என கருதி ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று 5 பவுன் நகையை கொண்டு வந்து கொடுத்தார்.

உடனே ஒரு சொம்பில் தண்ணீரை ஊற்றி அதில் மஞ்சள் பொடியை கலந்து நகையை மர்ம நபர்கள் போட்டனர். பின்னர் குடிப்பதற்கு தண்ணீர் தருமாறு கேட்டனர். அதன்படி அவர் உள்ளே சென்றபோது சொம்பில் இருந்த 5 பவுன் நகையை 2 மர்மநபர்களும் நைசாக எடுத்து வைத்துக்கொண்டனர். நவநீதம் அம்மாள் தண்ணீர் கொண்டு வந்ததும் இந்த சொம்பை அப்படியே பூஜை அறையில் வைத்து பூஜை செய்து நகையை எடுத்து பாருங்கள். பளபளவென இருக்கும் என்று கூறி சொம்பை எடுத்து அவரிடம் கொடுத்தனர். அந்த சொம்பை பூஜை அறைக்கு எடுத்துசென்று வைத்து சாமி கும்பிட்டார். அதற்குள் மர்மநபர்கள் நகையுடன் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

சொம்பில் நகை இருக்கும் என நினைத்து நகையை எடுக்க முயன்றபோது நகை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்த நவநீதம் அம்மாள் வெளியே வந்தபோது பாலிஷ் செய்வதாக கூறிய நபர்களும் இல்லை. இதனால் தன்னை நூதன முறையில் நயவஞ்சகமாக பேசி நகையை அபேஸ் செய்து சென்றதை உணர்ந்தார். இது குறித்து அவர் குடியாத்தம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com