வட்டி இல்லாமல் கடன் தருவதாக கூறி சென்னையில் 500 கிலோ நகைகள் மோசடி - 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது

வட்டி இல்லாமல் கடன் தருவதாக கூறி 500 கிலோ நகைகளை சுருட்டிக்கொண்டு தலைமறைவான 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வட்டி இல்லாமல் கடன் தருவதாக கூறி சென்னையில் 500 கிலோ நகைகள் மோசடி - 3 பெண்கள் உள்பட 5 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உமர் அலி என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2019-ம் ஆண்டு பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

சென்னை மேற்கு மாம்பலத்தில் ரூபி ராயல் ஜூவல்லர்ஸ் மற்றும் பேங்கர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று செயல்பட்டது. இந்த நிறுவனம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இஸ்லாமிய மக்களுக்கு வட்டி இல்லாமல் நகைக்கடன் வழங்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை நம்பி ஏராளமான அப்பாவி இஸ்லாமியர்கள் இந்த நிறுவனத்தில் தங்களது சொந்த தேவைகளுக்காக நகைகளை அடகு வைத்தனர். ஆனால் வாடிக்கையாளர்களிடம் வட்டி எதுவும் வாங்காமல், அவர்கள் அடகு வைத்த நகைகளை வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனத்தில் மேற்படி ரூபி ஜூவல்லர்ஸ் நிறுவனத்தினர் மறு அடகு வைத்து பணம் வாங்கிக்கொண்டுள்ளனர்.

திடீரென்று அந்த நிறுவனத்தினர் தங்களது நிறுவனத்தை மூடி விட்டு தலைமறைவாகி விட்டனர். அந்த நிறுவனத்தில் அடகு வைத்த, தங்களது நகைகளை இழந்து அப்பாவி இஸ்லாமிய மக்கள் தவித்த நிலையில் உள்ளனர். பெரிய அளவில் நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பேர் நகைகளை பறி கொடுத்திருக்கலாம். குறிப்பிட்ட ரூபி ராயல் நிறுவனத்தினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து அப்பாவி இஸ்லாமிய மக்கள் இழந்த நகைகளை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. கூடுதல் டி.ஜி.பி.ஆபாஷ்குமார், ஐ.ஜி.கல்பனா நாயக் ஆகியோர் மேற்பார்வையில், சூப்பிரண்டு தில்லை நடராஜன் தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி ரூபிராயல் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் சையது ரகுமான், அனிசூர் ரகுமான் மற்றும் ஊழியர்கள் ரிகானா, சஜிதா, ஷஹீனா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி, அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட தகவலும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

500 கிலோ நகைகள் வரை மோசடி செய்யப்பட்டுள்ளது என்றும், 3 ஆயிரம் பேர் வரை இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் மேற்படி செய்ததிக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com