அமைச்சர் நமச்சிவாயம் 50-வது பிறந்தநாள் விழா - சஞ்சய்தத், நாராயணசாமி நேரில் வாழ்த்து

அமைச்சர் நமச்சிவாயம் தனது 50-வது ஆண்டு பிறந்த நாள் பொன் விழாவை தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு காங்கிரசின் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத், நாராயணசாமி மற்றும் பிரமுகர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
அமைச்சர் நமச்சிவாயம் 50-வது பிறந்தநாள் விழா - சஞ்சய்தத், நாராயணசாமி நேரில் வாழ்த்து
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மாநில பொதுப்பணித்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவருமான நமச்சிவாயம் நேற்று தனது 50-வது பிறந்த நாளை தனது சொந்த ஊரான வி.மணவெளியில் கொண்டாடினார். இதனை முன்னிட்டு நேற்று அதிகாலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து காலை 6 மணியளவில் மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி கும்பிட்டார். அமைச்சர் நமச்சிவாயத்துடன் அவரது மனைவி வசந்தி, மகன் சிவஹரீஷ் ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

சாமி தரிசனம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்ததும் அமைச்சரின் 50-வது பிறந்த நாள் விழாவை குறிக்கும் வகையில் அவரது ஆதரவாளர் அன்பழகன், தொண்டர்களுக்கு 50 ரூபாய் நோட்டுகளை பரிசாக வழங்கினார். தொடர்ந்து கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு நமச்சிவாயம், அவரது மனைவி, மகன் ஆகியோர் வழிபட்டனர். இதன்பின் அங்கு தனது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டார்.

அங்கிருந்து இரும்பையில் உள்ள மாகாளேஸ்வரர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் நமச்சிவாயம் ஊர்வலமாக சென்றார். அங்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் மணவெளியில் உள்ள தனது வீட்டிற்கு தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்தில் ராகுல்காந்தி, நமச்சிவாயத்தின் படங்களை முகமூடியாக அணிந்தபடி தொண்டர்கள் சென்றனர்.

மணவெளியில் இருந்து 2 குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தட்டாஞ்சாவடியில் உள்ள குலதெய்வம் வீரபத்திரசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு வழிபட்டார்.

பின்னர் அங்கிருந்து வீடு திரும்பிய நமச்சிவாயம் தனது பெற்றோரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து வணங்கினார். தொடர்ந்து ஆதரவாளர்கள், தொண்டர்கள் ஏற்பாடு செய்திருந்த 50 கிலோ கேக்கை வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார். கேக் துண்டுகளை தனது மனைவி, மகன் மற்றும் உறவினர்களுக்கும், கட்சி பிரமுகர்கள், தொண்டர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்.

நமச்சிவாயத்துக்கு அதிகாலை முதலே பிரமுகர்களும், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தபடி இருந்தனர். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், மாநில பொறுப்பாளருமான சஞ்சய்தத் நேரில் வந்து வாழ்த்தினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர்.

இளைஞர் காங்கிரஸ் சார்பில் வில்லியனூர் தேரோடும் வீதியில் உள்ள அமைச்சரின் அலுவலகம் எதிரே அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக அமைச்சர் நமச்சிவாயத்தின் பெயருக்கு ஏழை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்கிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்ற மேடைக்கு இளைஞர் காங்கிரசார் நமச்சிவாயத்தை ஊர்வலமாக அழைத்துவந்தனர். விழாவுக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பூக்கடை ரமேஷ் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயத்திற்கு ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவர், கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம் 1000-க்கும் மேற்பட்ட ஏழை மக்களுக்கு வேட்டி-சேலைகள் வழங்கினார். மேலும் 5 பேர் தொழில் செய்வதற்காக தள்ளுவண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com