தஞ்சை மாவட்டத்தில் 5,275 பேர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதினர்

தஞ்சை மாவட்டத்தில் 5,275 பேர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதினர்.
தஞ்சை மாவட்டத்தில் 5,275 பேர் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதினர்
Published on

தஞ்சாவூர்,


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு நேற்று தொடங்கியது. முதல்தாள் தேர்வு தஞ்சை மாவட்டத்தில் 14 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வு எழுத 6,001 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் இவர்களில் 5,275 பேர் தான் தேர்வு எழுதினர். 726 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தஞ்சை மாவட்டத்தில் 41 மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக தரைளத்தில் தேர்வு அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. உடல் ஊனமுற்றோர், கண் பார்வையற்றோர், காது கேளாத, வாய் பேச இயலாதோர், மனவளர்ச்சி குன்றிய மாணவர்களுக்கு கூடுதலாக 1 மணிநேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இவர்கள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனர். தேர்வு மையத்திற்குள் செல்போன், கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. தஞ்சை தூய அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வை கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் முதல் தாள் தேர்வு 5,275 பேர் எழுதினர். தேர்வை கண்காணிக்க 1,476 பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு பணிகள் சிறப்பான முறையில் நடைபெறுவதை கண்காணிக்க தமிழகஅரசால் ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனர் நிமயனம் செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் சிரமமின்றி தேர்வு மையத்திற்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.


இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2ம் தாள் தேர்வு தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 9 மையங்களில் 3,786 பேரும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 13 மையங்களில் 5,589 பேரும், தஞ்சை கல்வி மாவட்டத்தில் 16 மையங்களில் 6,641 பேரும், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 2 மையங்களில் 629 பேரும் என 40 மையங்களில் 16,645 பேர் எழுதுகின்றனர் என்றார்.

தேர்வு எழுத பலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்தனர். அந்த குழந்தைகளை தங்களது கணவர் மற்றும் தாய், மாமியாரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். குழந்தைகளுடன் மரத்தடி நிழலில் அவர்கள் அமர்ந்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com