திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்த 58 குழுக்கள்; கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்த 58 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்த 58 குழுக்கள்; கலெக்டர் தகவல்
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் போர்க்கால அடிப்படையில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ குழு வாகனங்கள் மற்றும் புகைதெளிக்கும் வாகனங்கள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி வாகனங்களை கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதையொட்டி காய்ச்சல் மற்றும் இதர தொற்று நோய்கள் பரவாமல் கட்டுப்படுத்தும் பொருட்டு காய்ச்சல் தடுப்பு பணிக்குழு மற்றும் தொற்றுநோய்கள் விழிப்புணர்வுக்குழு, காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவக்குழு என 58 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுக்களை களப்பணியில் கண்காணிக்க உதவி இயக்குனர் அளவில் உள்ள அலுவலர் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 29 குழுக்கள் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், 29 குழுக்கள் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் துப்புரவு மற்றும் காய்ச்சல் நோய்த்தடுப்பு நடவடிக்கை, கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிகளை அணுகி மருத்துவரின் ஆலோசனையை பெற்று உரிய மருந்துகளை உட்கொள்ள வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்தவர்களும் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

1,500 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு கொசு ஒழிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பணி நன்னீரில் வளரும் கொசுப்புழு உற்பத்தியை தடுப்பதற்கும் அவ்வாறு கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுப்பு நடவடிக்கை குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பூண்டி, கடம்பத்தூர், திருவாலங்காடு, வில்லிவாக்கம், பூந்தமல்லி போன்ற பகுதிகளில் தீவிர நோய்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்

இந்த நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரபாகரன், திருவள்ளூர் தாசில்தார் பாண்டியராஜன் மற்றும் திரளான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com