தூத்துக்குடி மாவட்டத்தில் 5-வது நாளாக வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல்; 976 பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 5-வது நாளாக அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் 976 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 5-வது நாளாக வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல்; 976 பேர் கைது
Published on

தூத்துக்குடி,

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, அனைவருக்கும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பு(ஜாக்டோ- ஜியோ) சார்பில் கடந்த 22-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

இந்த போராட்டம் காரணமாக அரசு அலுவலகங்களில் பணிகள் முடங்கின. ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தால் பல பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டது. அதேபோன்று போராட்டத்தை முன்னின்று நடத்திய சங்க நிர்வாகிகளையும் போலீசார் கைது செய்தனர். ஆனால் நேற்றும் ஜாக்டோ-ஜியோ போராட்டம் தொடர்ந்தது. இதனால் மாவட்டத்தில் 363 பள்ளிக்கூடங்கள் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று காலையில் கோரிக்கையை வலியுறுத்தி தூத்துக்குடி அரசு ஊழியர் சங்கம் முன்பு பாளையங்கோட்டை ரோட்டில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கலையசரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஜாக்டோ உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மயில், ராஜ்குமார் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக வந்து பாளையங்கோட்டை ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 976 பேரை கைது செய்தனர். இதில் 533 பேர் பெண்கள் ஆவர். அனைவரும் தூத்துக்குடியில் உள்ள 4 திருமண மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com