6 சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச திருமண மண்டபம், விளையாட்டு அரங்கம் அமைத்து தருவேன் - செயல்வீரர்கள் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பேச்சு

வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் எனது சொந்த செலவில் இலவச திருமண மண்டபம், விளையாட்டு அரங்கம் அமைத்து தருவேன் என்று வேலூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பேசினார்.
6 சட்டமன்ற தொகுதிகளிலும் இலவச திருமண மண்டபம், விளையாட்டு அரங்கம் அமைத்து தருவேன் - செயல்வீரர்கள் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பேச்சு
Published on

வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக அதன் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். இதனை தொடர்ந்து வேட்பாளர் அறிமுக கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. வேலூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வேலூர் சட்டமன்ற தொகுதி கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.

கூட்டத்துக்கு நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவரும், வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை அறிமுகப்படுத்தி பேசினார். வேலூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவர் டாக்டர் வி.எஸ்.விஜய் வரவேற்று பேசினார்.

முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம், பா.ம.க. மாநில துணை தலைவர் கே.எல்.இளவழகன், அகில இந்திய கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் நலசங்க தலைவர் ஆர்.டி.பழனி, தே.மு.தி.க. மத்திய மாவட்ட தலைவர் ஸ்ரீதர், பா.ஜ.க. மாவட்ட தலைவர் தசரதன், த.மா.கா. மத்திய மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி, புதிய நீதிக்கட்சி மாவட்ட செயலாளர் ஜூபிடர் செந்தில்குமார், புதிய தமிழகம், புரட்சி பாரதம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பேசினர்.

கூட்டத்தில் வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சிறப்புரை ஆற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

என்னுடைய வெற்றியை வேலூர் மக்கள் இன்றே தீர்மானித்து விட்டார்கள். அந்த அளவுக்கு செயல்வீரர்கள் கூட்டம் மாநாடு போல் உள்ளது. தமிழக அரசியல் வரலாற்றில் இவ்வளவு பெரிய மெகா கூட்டணி அமைந்தது கிடையாது. மாநில அரசின் சாதனையை நாள் முழுவதும் சொல்லலாம். அந்த அளவுக்கு திட்டங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளது. மத்தியில் பா.ஜ.க. அரசு இந்தியாவில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது எம்.ஜி.ஆர். என்னை போன்ற இளம் எம்.எல்.ஏ.க்களிடம், நீங்கள் கொடுத்து பழக வேண்டும். வாங்கி பழக கூடாது என்று கூறினார். அவர் கூறியதை இன்றளவும் நான் கடைப்பிடித்து வருகிறேன். எனக்கு தாய் வீட்டு சீதனமாக இரட்டை இலை சின்னம் கிடைத்து உள்ளது.

என்னை வெற்றிபெற செய்தால் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அலுவலகம் அமைத்து ஏழை மாணவர்களுக்கு இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பேன். எனது சொந்த செலவில் ஒவ்வொரு தொகுதியிலும் இலவச விளையாட்டு அரங்கம், இலவச திருமண மண்டபம் அமைத்து தருவேன்.

நான் வெற்றி பெற்றால் கோதாவரி - பாலாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவேன். பெங்களூரு மக்களுக்கு மருத்துவ சேவை செய்வது போல வேலூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மக்களுக்கும் மருத்துவ சேவை கிடைக்க வழிவகை செய்வேன். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் வேலூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் எம்.மூர்த்தி, புதிய நீதிக்கட்சியின் மாவட்ட தலைவர் ஜி.பி.கே.பாலாஜி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் த.மா.கா. மாநகர மாவட்ட தலைவர் ஆர்.ஜே.மூர்த்தி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com