

திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தனியார் விமான நிறுவனம் தினமும் இரண்டு விமானங்களை இயக்கி வருகிறது. இந்த விமானங்கள் தினமும் இரவு 10.30 மணி மற்றும் நள்ளிரவு 12.20 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வருவது வழக்கம்.
திருச்சியில் அந்த விமானங்கள் ஒரு மணி நேரம் கழித்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும். இந்த இரண்டு விமானங்களிலும் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
3 பேரை பிடித்தனர்
இதனை தொடர்ந்து வருவாய் புலனாய்வு இயக்குனரகத்தின் கோவை, மதுரை, தூத்துக்குடி பிரிவை சேர்ந்த அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் முகாமிட்டனர். அவர்கள் முதலில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர்.
அப்போது கடத்தல் தங்கம் கொண்டு வரப்பட்டால் அதனை வாங்கி செல்வதற்காக பயணிகளை வரவேற்க வந்தவர்கள் போல் விமான நிலையத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். இதில் அடுத்து வரக்கூடிய இரண்டாவது விமானத்தில் தான் தங்க கட்டிகள் கடத்தி வரப்படுவது உறுதியானது.
6 கிலோ தங்கம் பறிமுதல்
இதனை தொடர்ந்து அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் 12.20 மணிக்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய 3 பயணிகள் கொண்டு வந்த சூட்கேஸ் மற்றும் பொருட்களை அதிகாரிகள் சோதனை போட்டனர்.
அவர்கள் விளையாட்டு ரகத்தை சேர்ந்த சைக்கிள்களின் உதிரிபாகங்கள், சூட்கேஸ் ஆகியவற்றில் தங்க கட்டிகளை மறைத்து கடத்தி கொண்டு வந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து மொத்தம் 6 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 93 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
6 பேர் கைது
சிங்கப்பூரில் இருந்து தங்க கட்டிகள் கடத்தி வந்தது தொடர்பாக நாகை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த கோபி (வயது42), கஜேந்திரன் (43), திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த ராஜ சுந்தரம் (29) மற்றும் ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் ஆகிய 6 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கோபி, கஜேந்திரன், ராஜ சுந்தரம் ஆகிய 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் ஆகிய 3 பேரையும் சொந்த ஜாமீனில் விடுவித்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி விமான நிலையத்தில் ஒரே நேரத்தில் 6 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது இந்த ஆண்டின் மிகப்பெரிய வேட்டையாக கருதப்படுகிறது.