

துவரங்குறிச்சி,
சென்னையில் இருந்து மதுரை உசிலம்பட்டி நோக்கி சுமார் 15 பயணிகளுடன் தனியார் ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. நேற்று அதிகாலை திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த சேத்துப்பட்டி என்ற இடத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதனால் பஸ்சில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் திடுக்கிட்டு கண் விழித்து, அலறி அடித்தபடி பஸ்சை விட்டு வெளியே வந்தனர். இந்த விபத்தில் பஸ்சில் இருந்த மதுரை மேலூர் அருகே உள்ள காத்தப்பட்டியை சேர்ந்த பாலகிருஷ்ணன்(வயது 35), பாண்டியா நகரைச் சேர்ந்த ராஜேஷ்(31), தூத்துக்குடி எஸ்.எல்.புரத்தைச் சேர்ந்த ராமசாமி(46), சென்னை பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சுப்பையா(50), மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த முத்துக்குமார் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
அவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் தங்களுடைய ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.