

பூந்தமல்லி,
மதுரவாயல் கந்தசாமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 32). இவர், கடந்த 2002-ம் ஆண்டு வாலாஜாபாத்தை சேர்ந்த லட்சுமணன் (47) என்பவரை கொலை செய்த வழக்கில் வாலாஜாபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
2003-ம் ஆண்டு இந்த கொலை வழக்கில் சரவணனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி காஞ்சீபுரம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் சரவணன், 2012-ம் ஆண்டு புழல் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். ஆனால் பரோல் காலம் முடிந்து மீண்டும் சிறைக்கு செல்லாமல் அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர்.
இந்தநிலையில் சுமார் 6 வருடங்களாக தலைமறைவாக இருந்த சரவணன், மதுரவாயல் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணனை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.