பாந்திராவில் 60 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் : 2 குழந்தைகள் காயம்

பாந்திராவில் சிலிண்டர் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்குள்ள 60 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. இதில் 2 குழந்தைகள் காயம் அடைந்தனர்.
பாந்திராவில் 60 குடிசை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் : 2 குழந்தைகள் காயம்
Published on

மும்பை,

மும்பை புறநகர் மேற்கு பகுதியான பாந்திரா ரெயில் நிலையம் எதிரில் நர்கிஸ் தத் நகர் குடிசைப்பகுதி உள்ளது. இங்கு சுமார் ஆயிரக்கணக்கான குடிசை வீடுகள் உள்ளன.

இந்தநிலையில், நேற்று காலை 11.50 மணியளவில் இங்குள்ள ஒரு வீட்டில் திடீரென கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அந்த இடமே அதிர்ந்தது.

சிலிண்டர் வெடித்ததால் அந்த வீடு பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது. சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு ஏதோ குண்டுதான் வெடித்து விட்டதோ என்று அடுத்தடுத்து உள்ள வீடுகளில் இருந்த மக்கள் தங்கள் குழந்தைகளுடன் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினார்கள்.

இந்த நிலையில், தீ மளமளவென பக்கத்து வீடுகளுக்கும் வேகமாக பரவியது. அந்த வீடுகளில்இருந்த சிலிண்டர்களும், டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களும் வெடித்து சிதறின. கரும்புகையுடன் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது.

இந்த பயங்கர தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு 9 வாகனங்களில் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 10 தண்ணீர் டேங்கர்களும் சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்டன.

அவர்கள் நாலாபுறமும் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். எனினும் அவர்களால் உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினார்கள். இதற்கிடையே தகவல் அறிந்த அப்பகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆஷிஸ்செலார் அங்கு வந்து பார்வையிட்டு தீயணைப்பு பணியை முடுக்கி விட்டார்.

இந்த நிலையில், சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 60 குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. வீடுகளில் இருந்த பொருட்களும் தீக்கிரையாகின.

அந்த வீடுகளில் வசித்து வந்தவர்கள் சோகத்துடன் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர். இந்த தீ விபத்தில் 2 குழந்தைகள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல அந்தேரி ஆனந்த நகர் பகுதியில் உள்ள குடிசை வீடுகளில் மதியம் 2 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயை அணைத்தனர். இதில் 2 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகியதாக கூறப்படுகிறது.

தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com