ஊரடங்கை மீறிய 6,176 பேர் கைது - 5,765 வாகனங்கள் பறிமுதல்

திருப்பூர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறிய 6 ஆயிரத்து 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்து 765 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
ஊரடங்கை மீறிய 6,176 பேர் கைது - 5,765 வாகனங்கள் பறிமுதல்
Published on

திருப்பூர்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் உத்தரவுப்படி மாவட்ட மற்றும் மாநில எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து யாரும் தேவையில்லாமல் திருப்பூர் மாவட்டத்துக்குள் நுழைவது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டியும், கொரோனா வைரசின் பாதிப்பின் முக்கியத்துவத்தையும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். வீதியில் சுற்றித்திரிபவர்களை போலீசார் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பிவைக்கிறார்கள்.

ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்கள் மீது இதுவரை மாவட்டத்தில் 5 ஆயிரத்து 611 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 6 ஆயிரத்து 176 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்து 765 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுவிலக்கு பிரிவில் 261 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும், காய்கறிகளையும் ஒரு வாரத்துக்கு தேவையான அளவில் ஒரே நாளில் வாங்கிவைத்துக்கொள்ள வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒருவர் மட்டுமே முககவசம் அணிந்து வர வேண்டும். இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து வெளியே வர வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களை மனிதநேயத்துடன் நடத்த வேண்டும்.

இந்த தகவலை திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com