தர்மபுரி மாவட்டத்தில் 6-வது நாளாக ஊரடங்கு; காய்கறிகள் விலை உயர்வு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நேற்று 6-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் கடைகளில் காய்கறிகள் விலை உயர்ந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் 6-வது நாளாக ஊரடங்கு; காய்கறிகள் விலை உயர்வு
Published on

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தாக்கத்தை தடுக்க நேற்று 6-வது நாளாக தொடர்ந்து ஊரடங்குஅமல்படுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசார் ஆங்காங்கே தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உழவர் சந்தையில் செயல்பட்ட காய்கறி கடைகள் கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டன. இந்த காய்கறி கடைகளில் நேற்று காலை அந்தந்த பகுதி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்கினார்கள்.

காய்கறிகளின் வரத்து குறைவால் விலை சற்று உயர்ந்தது. குறிப்பாக சின்ன வெங்காயத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்தது. உழவர் சந்தை கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.85-க்கு விற்பனை ஆனது. தக்காளி கிலோ ரூ.12-க்கும், அவரைக்காய் கிலோ ரூ.36-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.38-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.110 முதல் ரூ.120 வரை பல்வேறு விலைகளில் விற்பனையானது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. சின்ன வெங்காயத்தின் கடும் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தர்மபுரி நகரில் உள்ள மீன்கடைகளில் வாடிக்கையாளர்களிடையே இடைவெளியை ஏற்படுத்த கட்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்த கட்டங்களுக்குள் நின்று காத்திருந்து ஒருவர் பின் ஒருவராக மீன்களை வாங்கி சென்றனர். மீன் கடைகள் மற்றும் காய்கறி கடைகள் செயல்பட்ட பகுதிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். காலை 10 மணி வரை ஆங்காங்கே சில இடங்களில் இறைச்சி கடைகள் செயல்பட்டன. அதன்பின்னர் அந்த கடைகள் அடைக்கப்பட்டன.

இதேபோன்று பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காய்கறிகள் விலை அதிகரித்தது. இதனை பொதுமக்கள் வாங்கி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com