7 தமிழர்களை விடுவிக்கக்கோரிய வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு; கன்னியாகுமரியில் போராட்டம்

7 தமிழர்களை விடுவிக்கக்கோரிய வாகன பேரணிக்கு கன்னியாகுமரியில் அனுமதி மறுக்கப்பட்டதால், தமிழ் தேச மக்கள் கட்சியினர் போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்.
7 தமிழர்களை விடுவிக்கக்கோரிய வாகன பேரணிக்கு அனுமதி மறுப்பு; கன்னியாகுமரியில் போராட்டம்
Published on

கன்னியாகுமரி,

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட7 தமிழர்களை விடுவிக்க கோரி தமிழ் தேச மக்கள் கட்சியினர் கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இருசக்கர வாகன பேரணி நடத்த முடிவு செய்தனர். இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்ட போது அவர்கள் அனுமதி மறுத்துவிட்டனர்.

உடனே அனுமதி கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கோர்ட்டில் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழ்தேச மக்கள் கட்சி தலைவர் திருமுருகன் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வந்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் செந்தமிழ் குமரன், ரமேஷ் உள்பட பலர் வந்தனர்.

திருமுருகன் குழுவினர் கன்னியாகுமரி வந்து சேரும் முன்பு நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியானது. இதனால், திருமுருகன் நடத்த இருந்த வாகன பேரணிக்கு கன்னியாகுமரி போலீசார் அனுமதி மறுத்தனர்.

கன்னியாகுமரி வந்த அவர்களை போலீசார் நேற்று காலையில் லீ புரத்தில் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர்களை கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். திருமுருகன் குழுவினரிடம் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், திருமுருகன் குழுவினர் பேரணி நடத்துவதில் உறுதியாக இருந்தனர்.

இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் போலீஸ் நிலையம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் முறையிடுவதாக கூறி, நாகர்கோவில் நோக்கி புறப்பட்டனர். நாகர்கோவில் வந்த அவர்கள் திருமுருகன் தலைமையில் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவை சந்தித்து மனு கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com