பெலகாவியில் தொடர் கனமழை: வீடு இடிந்து விழுந்து 7 பேர் சாவு

பெலகாவியில் கனமழைக்கு வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
பெலகாவியில் தொடர் கனமழை: வீடு இடிந்து விழுந்து 7 பேர் சாவு
Published on

பெங்களூரு

கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில், வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த பருவமழை தற்போது தீவிரம் அடைந்து உள்ளது. பெங்களூரு, சிவமொக்கா, சிக்கமகளூரு உள்ளிட்ட பகுதிகளிலும், வடகர்நாடகத்திலும் கனமழை பெய்து வருகிறது.

வடகர்நாடகத்தில் உள்ள பெலகாவி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பெலகாவி மாவட்டம் ஹிரேபாகேவாடி அருகே படலஅங்கலகி கிராமத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து கொண்டு இருந்தது.

அப்போது அந்த கிராமத்தில் வசித்து வரும் பீமப்பா கனகவி என்பவருக்கு சொந்தமான பழமையான வீடு இடிந்து விழுந்தது. இதில் அந்த வீட்டில் இருந்த பீமப்பா கனகவி மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 பேர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் உடனடியாக ஹிரேபாகேவாடி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் வீட்டின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்க எடுத்தனர்.

அப்போது ஒரு சிறுமி உள்பட 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது தெரிந்தது. மேலும் 3 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் மேலும் 2 பேர் இறந்தனர். இதனால் சாவு எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெயர்கள் கங்கவ்வா(வயது 50), சத்யவ்வா(45), பூஜா(8), சவிதா(28), லட்சுமி(15), அர்ஜூன், காசவ்வா என்பதும் தெரியவந்தது. இவர்கள் 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். பீமப்பா படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து ஹிரேபாகேவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். கனமழைக்கு வீடு இடிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் ஹிரேபாகேவாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெலகாவி பெய்து வரும் தொடர் கனமழையால் படலஅங்கலகி கிராமத்தில் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், வீடு இடிந்து விழுந்து பலியான 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவித்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com