

வடமதுரை,
அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டியை சேர்ந்தவர் துரைச்சாமி (வயது 37). இவர் தனது உறவினர்களான சம்பக்காட்டுபள்ளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளையம்மாள் (50), போதும்பொன்னு (21) ஆகியோருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் அய்யலூர்-வேங்கனூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வளவிசெட்டிபட்டியை சேர்ந்த ராஜ்குமார் (39) மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்தார். திடீரென 2 மோட்டார்சைக்கிள்களும் மோதிக் கொண்டன. இதில் படுகாயம் அடைந்த 4 பேரும், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் துரைச்சாமி மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அதேபோல் வடமதுரையை அடுத்த தென்னம்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி (50). இவர் தனது நண்பரான சிங்காரக்கோட்டையை சேர்ந்த சக்திவேலுடன் (46) மோட்டார் சைக்கிளில் வடமதுரைக்கு சென்றார். தென்னம்பட்டி பிரிவு அருகே சென்ற போது வடமதுரை லக்கன்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் (38) ஓட்டி சென்ற மோட்டார்சைக்கிளுடன், பழனிச்சாமியின் மோட்டார்சைக்கிள் மோதியது.
இந்த விபத்தில் 3 பேரும் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த 2 விபத்துகள் குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.