11 ஏக்கர் நிலத்தில் 70 ஆயிரம் மரங்கள்: ஈரோட்டின் மைய பகுதியில் வளரும் காடு; சமூக ஆர்வலரால் உருவாகிறது

ஈரோட்டின் மைய பகுதியில் சமூக ஆர்வலர் ஒருவரின் ஆர்வத்தால் 11 ஏக்கர் நிலத்தில் 70 ஆயிரம் மரக்கன்றுகளுடன் காடு ஒன்று வளர்ந்து வருகிறது.
சமூகஆர்வலர் இளங்கவி; காடு வளர்ப்பு பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்ட போது எடுத்த படம்.
சமூகஆர்வலர் இளங்கவி; காடு வளர்ப்பு பணியில் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்ட போது எடுத்த படம்.
Published on

சமூக ஆர்வலர்

ஈரோடு பகுதியை சேர்ந்தவர் கு.இளங்கவி. சமூக ஆர்வலர். 33 வயதாகும் இளங்கவி தொழில் அதிபராக உள்ளார். தொழில் ஆர்வத்துடன், சமூக ஆர்வமும் அதிகம் கொண்ட இவர் கல்லூரி காலத்திலேயே சமூக அமைப்புகளில் இணைந்து பல்வேறு பணிகளை தொடங்கினார். தற்போது இவர் நிறுவனராக உள்ள விருட்சம் பவுண்டேசன், மண்டல பொறுப்பாளராக உள்ள ஈரோடு ரவுண்ட் டேபிள் அமைப்புகள் மூலம் ஈரோட்டில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகிறார். இதில் சிறப்பு திட்டமாக, தெற்கு ரெயில்வே சேலம் கோட்டத்துடன் இணைந்து ஈரோடு எலக்ட்ரிக் லோகோ செட் பகுதியில் 11 ஏக்கர் பரப்பளவில் ஒரு மினி காட்டினையே உருவாக்கி இருக்கிறார்.

ஈரோடு மாநகரின் மைய பகுதியில் வளர்ந்து வரும் இந்த 11 ஏக்கர் காடு குறித்து கு.இளங்கவி கூறியதாவது:-

நான் என்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ. படித்து இருக்கிறேன். ரப்பர் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு இருக்கிறேன். தொடக்கத்தில் யங் இந்தியன் அமைப்பு மூலம் ஈரோடு ரெயில் நிலையத்தில் தூய்மை பணிகள் செய்தோம். அந்த நேரத்தில் ரெயில்வே சுவர்களில் ஓவியம் வரைதல், மரக்கன்று நட்டு பராமரித்தல் பணிகள் மேற்கொண்டதுடன், ஒளிரும் ஈரோடு அமைப்பு மூலம் ரெயில் நிலைய பூங்கா அமைப்பு பணியிலும் ஈடுபட்டோம். இதற்கிடையே எனது ஒத்த கருத்துடைய நண்பர்கள் ஏ.தீனதயாளன், ரமேஷ், எம்.யுவராஜ் ஆகியோருடன் இணைந்து விருட்சம் பவுண்டேசன் அமைப்பினை தொடங்கினேன். இதுபோல் ஈரோடு ரவுண்ட் டேபிள்98 மூலமாகவும் பணிகளை செய்து வந்தோம்.

ரெயில்வேயில்...

தொடக்கத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற அடிப்படையில் ஈரோட்டில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து சாலையோரங்களில் மரக்கன்றுகள் நட்டு வைத்தோம். ஆனால், சாலை பணிகள் நடைபெறும்போது அவை வெட்டப்படும் நிலை இருந்தது. இப்படி நன்கு வளர்ந்த சில மரங்களை காப்பாற்ற வேண்டி, அவற்றை பிடுங்கி மாற்று இடத்தில் நட முயற்சித்தோம். ஏற்கனவே ரெயில் நிலையத்தில் பல்வேறு உதவிகள் செய்து அதிகாரிகளுடன் பழக்கம் இருந்ததால் ரெயில்வே காலனியில் மரங்களை நடும் வாய்ப்பினை தந்தனர். இந்த பணியை அப்போதைய சேலம் கோட்ட ரெயில்வே மேலாளர் சுப்பாராவ் பார்வையிட்டு பாராட்டினார்.

அவருடன் இணைந்து சேலம் கோட்டத்தில் பல இடங்களில் மரக்கன்றுகள் நட்டோம். சுமார் 1,500 கன்றுகள் நட்டு வளர்ந்த நிலையில், நான் ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டேன். இதனால் ரெயில்வேயின் பல பகுதிகளுக்கும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஈரோடு ரெயில்வே எலக்ட்ரிக் லோகோ பணிமனை சென்றபோது அங்கு ஏராளமான இடம் வீணாக கிடப்பது தெரிந்தது. எனவே ரெயில்வேயின் காடுகள் வளர்ப்பு திட்டத்தை இங்கு நிறைவேற்றுவது என்று முடிவு செய்தோம்.

70 ஆயிரம் மரங்கள்

ரெயில்வே நிர்வாகம் மூலம் விருட்சம் பவுண்டேசன், ஈரோடு ரவுண்ட் டேபிள் அமைப்புகளுக்கு மரக்கன்று நடும் உரிமம் தரப்பட்டது. இந்த 2 அமைப்புகளுக்கும் திட்ட ஒருங்கிணைப்பாளராக நான் செயல்பட்டேன். முதலில் மரக்கன்றுகள் நட மண்ணை பதப்படுத்தி, இயற்கை உரங்கள் இட்டு தயார் செய்தோம். பின்னர் கடந்த ஆண்டு (2019) ஆகஸ்டு மாதம் மரக்கன்று நடவு பணியை தொடங்கினோம். ஒரு சதுர அடியில் 4 மரக்கன்றுகள் என்ற ஜப்பானிய மியாவாக்கி முறையை பின்பற்றி 12 வகையான மரக்கன்றுகளை நடவு செய்தோம். இந்த பணி கடந்த வாரம் நிறைவடைந்தது. 11 ஏக்கர் நிலத்தில் 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளன. நாவல், மாதுளை, கொய்யா, சப்போட்டா, பப்பாளி, மகிழம், நெல்லி, இலந்தை ஆகிய பழ மரங்களும் உள்ளன. பறவைகளை ஈர்க்கும் வகையில் காடு திட்டமிடப்பட்டு உள்ளது. ஒரு ஆண்டில் மரக்கன்றுகள் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளன. விரைவில் ஈரோட்டில் ஒரு மினி காடு உருவாகும். இதன் மூலம் ஓரளவு சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம். இவ்வாறு சமூக சேவகர் கு.இளங்கவி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com