நொகனூர் காப்புக்காட்டில் 75 யானைகள் முகாம் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரம்

நொகனூர் காப்புக்காட்டில் முகாமிட்டுள்ள 75 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
நொகனூர் காப்புக்காட்டில் 75 யானைகள் முகாம் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரம்
Published on

தேன்கனிக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இந்த யானைகள் ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் ராகி பயிரை குறி வைத்து தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளன.

வழக்கம் போல இந்த முறையும் 75-க்கும் மேற்பட்ட யானைகள் வந்தன. அவை தளி, ஜவளகிரியில் வன கிராமங்களையொட்டி உள்ள வனப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. பகலில் காட்டிற்குள் இருக்கும் இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியையொட்டி உள்ள நிலங்களில் புகுந்து ராகி, வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தளி மற்றும் ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து 75-க்கும் மேற்பட்ட யானைகள் நேற்று முன்தினம் இரவு ஜவளகிரியை சுற்றி உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்தன. அங்கு ராகி, வாழை உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்தன. அதில் 25 யானைகள் தனியாக பிரிந்து அஞ்செட்டி அருகே உள்ள சொப்புகுட்டை, அய்யன்புரம் தொட்டி கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்தன. இதன் பிறகு நொகனூர் கிராமத்திற்குள் வந்து விவசாய பயிர்களை யானைகள் நாசம் செய்தன.

தற்போது நொகனூர் மற்றும் சுற்று வட்டார காப்புக்காட்டில் 75 யானைகள் முகாமிட்டுள்ளன. இவற்றை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின் பேரில், தேன்கனிக்கோட்டை வனச்சரகர் வெங்கடாசலம், வனவர் கதிரவன், வனக்காப்பாளர்கள், உதவியாளர்கள் கொண்ட குழுவினர் யானைகளை பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும்கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com