பால்கர் மாவட்டத்தில் 8 தடவை நில நடுக்கம் மக்கள் பீதி

பால்கர் மாவட்டத்தில் 8 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
பால்கர் மாவட்டத்தில் 8 தடவை நில நடுக்கம் மக்கள் பீதி
Published on

வசாய்,

பால்கர் மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த 2 வாரங்களாக அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை கதி கலங்க வைத்தது. தகானு தாலுகாவில் உள்ள துண்டல்வாடி கிராமத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில் இங்குள்ள தகானு மற்றும் தலசாரி தாலுகாக்களில் உள்ள கிராம மக்களின் தூக்கத்தை நேற்று நிலநடுக்கம் கலைத்தது. அதிகாலை 3.29 மணி முதல் காலை 7.06 மணி வரை 8 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த கிராம மக்கள் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். சில வீடுகளில் சுவரில் விரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

பேரிடர் மீட்பு படை

இதில் முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 3.6 புள்ளிகள் பதிவாகியது. அடுத்து அதிகாலை 3.57 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 3.5 ரிக்டர் பதிவானது. காலை 7.06 மணிக்கு ஏற்பட்ட நில அதிர்வு 3.6 ரிக்டர் அளவில் பதிவானது. மற்ற 5 நில அதிர்வுகள் 2.3 ரிக்டர் முதல் 2.8 ரிக்டர் வரை பதிவானது.

இந்த நிலநடுக்கத்தை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு முகாமிட்டு உள்ளனர். பொதுமக்கள் பொது வெளியில் தங்க வசதியாக ஆங்காங்கே முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தொடர் நிலநடுக்கங்கள் மக்களை பீதிக்கு உள்ளாக்கி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com