திருப்பூர் மார்க்கெட்டில் ஒரே நாளில் 80 டன் மீன்கள் விற்பனை

திருப்பூர் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரிப்பால் ஒரே நாளில் 80 டன் மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. பொதுமக்கள் குவிந்ததால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது.
திருப்பூர் மார்க்கெட்டில் ஒரே நாளில் 80 டன் மீன்கள் விற்பனை
Published on

திருப்பூர்,

திருப்பூர் மீன் மார்க்கெட்டுக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும். இதனால் சாதாரண நாட்களில் 20 டன் மீன்களும், ஞாயிற்றுக்கிழமை அன்று 40 டன் மீன்களும் விற்பனை செய்யப்படும். ஆனால் மீன்பிடி தடை காலம் மற்றும் கொரோனா அச்சுறுத்தலால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு போன்ற காரணங்களால் மீன்கள் வரத்து குறைந்து காணப்பட்டது.

மேலும் திருப்பூர் மீன் மார்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி அதிகளவில் கூடுவதை தவிர்க்க மீன்கள் மொத்த விற்பனைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருப்பூர் மீன் மார்க்கெட்டுக்கு நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் ஆந்திராவில் இருந்து 60 டன் வளர்ப்பு மீன்களும், தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் இருந்து 20 டன் மீன்களும் என மொத்தம் 80 டன் மீன்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. அதன்படி நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் நேற்று காலை 9 மணிவரை மீன் மொத்த வியாபாரிகளுக்கு மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. சிலருக்கு சில்லரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வியாபாரிகள் பலரும் சமூக இடைவெளி என்பதையே மறந்து நெருக்கமாக நின்று மீன்கள் வாங்கினார்கள். இதனால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியானது.

விற்பனை குறித்து மீன் மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

பொதுவாக வார நாட்களை விட ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகளவில் மீன்கள் விற்பனை நடைபெறும். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை 40 டன் மீன்கள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் இந்த வாரம் 80 டன் மீன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் ஆந்திர மாநிலத்தில் இருந்து 60 டன் மீன்களும், தமிழகத்தில் இருந்து 20 டன் மீன்களும் என மொத்தம் 80 டன் மீன்கள் இந்த வாரம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் வளர்ப்பு மீன்கள் கடந்த வாரம் விற்பனை செய்யப்பட்ட அதே விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடல் மீன்கள் விற்பனை விறுவிறுப்பாக இருந்தது.

இதில் ஆந்திரா வளர்ப்பு மீன்கள் கட்லா ஒரு கிலோ ரூ.180-க்கும், ரோகு ரூ.160-க் கும், மிருகால் ரூ.160-க்கும், நெய் மீன் ரூ.100-க்கும், அணை பாறை ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மத்தி மீன் கிலோ ரூ.200-க்கும், அயிலை ரூ.300-க்கும், பாறை ரூ.500-க் கும், ஏட்டை ரூ.250-க்கும், சூரை ரூ.250-க்கும், சேரை ரூ.350-க்கும், இறால் ரூ.450-க் கும், வாவல் ரூ.800-க்கும், ஊழி ரூ.450-க்கும், விலா ரூ.450-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடல் மீன்கள் விற்பனைக்கு வராத நிலையில் நேற்று விற்பனைக்கு வந்த மீன்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுபோல் திருப்பூரில் உள்ள இறைச்சி கடைகளில் கடந்த ஒரு மாதமாகவே இறைச்சி விற்பனை குறைந்திருந்தது. குறிப்பாக ஆட்டு இறைச்சி விற்பனை மிகவும் குறைந்தது. கோழி இறைச்சி மட்டும் ஓரளவு நடந்தது.

இதுகுறித்து இறைச்சி கடைக்காரர்கள் கூறும்போது, ஆட்டுச்சந்தைகள் மூடப்பட்டதால் ஆடுகள் கிடைப்பதில்லை. இதனால் பல கடைகளில் ஆட்டு இறைச்சி விற்பனை இல்லை. வாடிக்கையாளர்கள் யாராவது ஆட்டு இறைச்சி கேட்டால் தெரிந்தவர்கள் அல்லது நண்பர்கள் கலையில் இருந்தால் வாங்கி கொடுக்கிறோம். ஒரு கிலோ ரூ.700-க்கு விற்பதால் அதிகம் யாரும் கேட்பதில்லை. கடைக்கு வருபவர்கள் கோழி இறைச்சி மட்டுமே வாங்குகிறார்கள். கோழி இறைச்சி கிலோ ரூ.220-க்கு விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் கோழி இறைச்சி விற்பனை குறைந்து விட்டது என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com