அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் 80 படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டன

அரியலூரில் நடந்த அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் 80 படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டன.
அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் 80 படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டன
Published on

அரியலூர்,

அரியலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான 45-வது ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது. பள்ளி அளவிலும், கல்வி மாவட்ட அளவிலும் போட்டி நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் அறிவியல் படைப்புகள் இதில் இடம் பெற்றிருந்தன. இந்த அறிவியல் கண்காட்சியினை மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா, தலைமை தாங்கி, குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர், 50 பள்ளிகளிலிருந்து மாணவ, மாணவிகளின் 80 அறிவியல் ஆராய்ச்சி திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அறிவியல் படைப்புகளை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது மாணவர்கள் படைப்புகளுக்குரிய விளக்கத்தினை அளித்தனர். மேலும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கண்காட்சியிலுள்ள படைப்புகளை ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.

ஆரோக்கியமும், சுகாதாரமும்...

உடல் நலனை பேணி காப்பதற்கான உணவு வகைகள் பற்றியும், உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய துரித உணவுகள் பற்றியும் பிரித்து வைத்திருந்த படைப்பு காண்போரை கவரும் வகையில் இருந்தது.

இக்கண்காட்சியில், ஆரோக்கியமும் சுகாதாரமும், ஆற்றல் வளங்கள் மேலாண்மை, உணவு பாதுகாப்பு, நீர் வளங்களை பாதுகாத்தல், மறு சுழற்சி, கழிவு மேலாண்மை, போக்குவரத்து மற்றும் தொலை தொடர்பு, டிஜிட்டல் தொழில் நுட்பங்கள், கணித மாதிரிகள் ஆகிய தலைப்புகளின் கீழ் படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட்டன. இதில் மாவட்ட அளவிலான போட்டியில் தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் விரைவில் நடைபெறவுள்ள மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழி தேவி (பொறுப்பு), மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அனந்தநாராயணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் கலைமதி, மணிவண்ணன், தலைமை ஆசிரியர்கள் சின்னதுரை, அறிவழகன், தங்கமணி, சரவணகுமார் உள்பட கண்காட்சி குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com