புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு-8,047 ஏக்கர் பாசன வசதி பெறும்

வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 8 ஆயிரத்து 47 ஏக்கர் பாசன வசதி பெறும்.
புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு-8,047 ஏக்கர் பாசன வசதி பெறும்
Published on

வாழப்பாடி:

வாழப்பாடி அருகே உள்ள புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 8 ஆயிரத்து 47 ஏக்கர் பாசன வசதி பெறும்.

ஆணைமடுவு அணை

வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதியின் குறுக்கே, புழுதிக்குட்டை கிராமத்தில், 67.25 அடி உயரத்தில், 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில், 263.86 ஏக்கர் பரப்பளவில் ஆணைமடுவு அணை அமைந்துள்ளது. இந்த அணையால், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு விவசாய நிலங்கள் என 8 ஆயிரத்து 47 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

சமீபத்தில் பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 63 அடியாக உயர்ந்தது. எனவே, ஆணைமடுவு அணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில், அணை வாய்க்கால் பாசன மற்றும் ஆறு, ஏரிப்பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தண்ணீர் திறப்பு

இதன் பேரில் புழுதிக்குட்டை ஆணைமடுவு அணையில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி நேற்று காலை தண்ணீர் திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மதகு வழியாக தண்ணீர் கால்வாயில் சீறிப்பாய்ந்து ஓடியது. தினமும் வினாடிக்கு 60 கன அடி வீதம், 22 நாட்களுக்கு புதிய ஆயக்கட்டு விவசாய பகுதிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 3 ஆயிரத்து 36 ஏக்கர் பாசன விவசாயிகள் பயன்பெறுகின்றனர்.

அதன்பிறகு வினாடிக்கு 50 கன அடி வீதம், 17 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டு விவசாய பகுதிக்கும் தண்ணீர் திறக்க பட உள்ளது. இதன் மூலம் 5 ஆயிரத்து 11 ஏக்கர் பாசன விவசாயிகள் பயன்பெறுகின்றனர். மொத்தம் 8 ஆயிரத்து 47 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

விவசாயிகள் மகிழ்ச்சி

முன்னதாக நீர் திறப்பு நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை சரபங்காவடிநில கோட்ட சேலம் செயற்பொறியாளர் ஆனந்தன், ஆத்தூர் உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி, ஆணைமடுவு நீர்த்தேக்க உதவி செயற்பொறியாளர் விஜயராகவன், ராமமூர்த்தி மற்றும் விவசாய பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு தீரும் என்பதால், வசிஷ்டநதி ஆற்றுப்படுகை கிராம விவசாயிகளும், ஆறு மற்றும் ஏரிப்பாசன விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com