

சேலம்,
சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறார்கள். அப்போது அவர்களால் குறைந்த அளவிலான புகையிலை பொருட்கள் மட்டுமே பறிமுதல் செய்ய முடிகிறது.
இந்தநிலையில் தாதகாப்பட்டி பகுதியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஈஸ்வர் என்பவரின் ஒரு மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார் சென்றது. அதன்பேரில் நேற்று மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மாரியப்பன் மற்றும் அன்னதானப்பட்டி போலீசார் அந்த கடைக்கு சென்று திடீரென சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் மளிகை கடையில் முதலில் குட்கா அதிகமாக கிடைக்கவில்லை. ஆனால் கடையின் மேற்கூரையில் தனியாக ரகசிய இடம் ஒதுக்கி குட்காவை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைப்பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா அதிகாரிகள் முன்னிலையில் எடை போட்டு பார்க்கப்பட்டது. மூட்டைகளில் ரூ.62 ஆயிரம் மதிப்பிலான 82 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது. பின்னர் அதை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன், உரிமம் ரத்து செய்து கடைக்கு சீல் வைத்தனர். மேலும் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள ஒரு மளிகை கடையில் 6 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் கூறுகையில், 2 கடைகளில் 88 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த ஒரு வாரத்தில் சேலத்தில் உள்ள 4 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களில் காவல்துறை சார்பில் 2 ஆயிரம் கிலோ, உணவு பாதுகாப்பு துறை சார்பில் 550 கிலோ குட்கா பறி முதல் செய்யப்பட்டன.
கடத்தல்காரர்கள் பெரிய அளவில் பதுக்கி வைப்பதை விட்டு விட்டு தற்போது குறைந்த அளவில் ஆங்காங்கே குட்கா பதுக்கி வைத்து இருக்கிறார்கள். குட்கா வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு உள்ளன. இதை கட்டுப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களது கடைகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றார்.