டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேருக்கு தீவிர சிகிச்சை

திருப்பூரில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள். மேலும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேருக்கு தீவிர சிகிச்சை
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதன்காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருப்பூர் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களின் வசதிக்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக தலா 30 படுக்கைகள் கொண்ட வார்டுகளும், 40 படுக்கைகளுடன் சிறுவர்களுக்கான ஒரு வார்டும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது பற்றிய விவரம் வருமாறு:-

திருப்பூர் பி.என்.ரோடு கூத்தம்பாளையம் பிரிவு ஜே.பி. நகரை சேர்ந்தவர் பாலு (வயது 45). தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகள் திவ்யதாரணி (9), அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த 5-ந்தேதி காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்று வந்த திவ்யதாரணிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.

இதனால் அவளுடைய பெற்றோர் அவளை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமிக்கு காய்ச்சல் குறையாததால், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு திவ்யதாரணிக்கு ரத்த பரிசோதனை செய்த போது, அவள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். இதையடுத்து அவளுடைய உடலை திருப்பூர் கொண்டு வந்த உறவினர்கள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.

இதற்கிடையில் காய்ச்சல் காரணமாக தினமும் சராசரியாக 100 பேர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். சாதாரண காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு வருபவர்களையும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை போல் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நேற்று திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் 3 ஆண்கள், 1 பெண், 4 சிறுமிகள், 1 சிறுவன் என மொத்தம் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com