

திருவெறும்பூர்,
திருவெறும்பூர் அருகே காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்பட்டு வருவதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது. இந்நிலையில் நேற்று அதிகாலையில் திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரை, வருவாய் ஆய்வாளர் யோகராஜா மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
திருவெறும்பூர் அருகே புத்தாவரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, காவிரி ஆற்றில் மணல் அள்ளி மூட்டையாக கட்டி மொபட்டில் கடத்தி வந்தது தெரியவந்தது. இவ்வாறு மணலை கடத்தி வந்த 9 மொபட்டுகளை பறிமுதல் செய்து திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள சர்க்கார்பாளையம் காவிரி ஆற்றின் அருகில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் மறைவான இடத்தில் லாரியை நிறுத்தி கொண்டு அருகில் உள்ள காவிரி ஆற்று மணலை சாக்கு மூட்டைகளில் அள்ளி, அதனை தலை சுமையாக சுமந்து வந்து லாரியில் ஏற்றி கடத்தப்படுவதாக புகார் வந்தது.
இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு திருவெறும்பூர் தாசில்தார் அண்ணாதுரை தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது மணலை லாரியில் ஏற்றிக் கொண்டிருந்த முஸ்தபா (வயது 50), சுப்பிரமணி (37) , செந்தில்குமார் (35), மூர்த்தி (35) , காத்தான் (32) ஆகிய 5 பேரையும் பிடித்து திருவெறும்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.
இதே போல் மணிகண்டம் அருகே உள்ள துரைக்குடி, கொளுக்கட்டைக்குடி, கோலார்பட்டி ஆகிய ஊர்களை ஒட்டியுள்ள கோரையாற்றுப்பகுதியில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக ஸ்ரீரங்கம் வருவாய் துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதனையடுத்து ஸ்ரீரங்கம் தாசில்தார் கனகமாணிக்கம் தலைமையிலான வருவாய்துறை அலுவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது துரைக்குடியில் இருந்து நாகமங்கலத்திற்கு சென்ற 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்ததில் கோரையாற்றுப்பகுதியில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த லாரிகளை பறிமுதல் செய்து மேல்நடவடிக்கைக் காக ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். அதேபோல ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கரை அருகே மணல் அள்ளி கடத்திச்சென்ற 8 மாட்டு வண்டிகளை தாசில்தார் கனகமாணிக்கம் பறிமுதல் செய்து மேல்நடவடிக்கைக்காக தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றார்.