

திருப்பூர்,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று மதியம் 1 மணிக்கு மின்வாரிய அலுவலகம் முன்பு குமரன் சாலையில் திடீர் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் க.செல்வராஜ் தலைமை தாங்கினார். தொ.மு.ச. மாநில துணை செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், தி.மு.க. மாநகர பொறுப்பாளர் மேங்கோ பழனிசாமி, நிர்வாகிகள் தங்கராஜ், ஈஸ்வரமூர்த்தி, ராமதாஸ், செந்தில்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் சாலையில் அமர்ந்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்.
சம்பவ இடத்துக்கு திருப்பூர் வடக்கு போலீஸ் உதவி கமிஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர் பிச்சையா மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 70 பேரை கைது செய்து திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சாலை மறியலால் 15 நிமிடம் குமரன் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபோல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரியும், துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறை, மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு முனிசிபல் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பவித்ரா தலைமை தாங்கினார். தலைவர் மைதிலி, மாநில செயற்குழு உறுப்பினர் சாவித்திரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் தென்னரசன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்ட 26 பேரை கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைதான அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.