9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 8-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி - புதுவை கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தகவல்

9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 8-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் என்று கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்தார்.
9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 8-ந்தேதி முதல் பள்ளிக்கு வர அனுமதி - புதுவை கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தகவல்
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி புதுவை, காரைக்கால் பகுதிகளில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் ஆலோசனைகள், அறிவுரைகள் வழங்கியுள்ளனர். ஏற்கனவே அறிவித்தபடி வருகிற 5-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்.

இதையொட்டி அன்றைய தினம் வகுப்பறைகளை சுத்தம் செய்வது கிருமிநாசினி தெளித்தல், சமூக இடைவெளியை கடைபிடித்து மாணவர்களை அமரச் செய்வது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 8-ந் தேதி முதல் மாணவர்கள் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களை சந்தித்து பாடங்களில் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து கேட்டு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

முன்பு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தான் பள்ளிகள் செயல்பட்டன. தற்போது ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும். திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களும், செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களும் பள்ளிக்குச் சென்று ஆசிரியர்களை சந்தித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம். மாணவர்கள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டும்தான் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

புதுவையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சுமார் 60 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். விருப்பத்தின் பேரில் பெற்றோர்கள் அனுமதியுடன் தான் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியும். இதற்காக தனியாக விண்ணப்ப படிவம் வழங்கப்படும். கண்டிப்பாக வகுப்பறைக்கு வர வேண்டும் என்று அவசியம் இல்லை. வருகை பதிவு செய்யப்பட மாட்டாது.

புதுவையில் இன்னும் பஸ் போக்குவரத்து தொடங்கவில்லை. எனவே தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு சென்று கூட அங்குள்ள ஆசிரியர்களை சந்தித்து மாணவர்கள் தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் அல்லது அவர்களது வீட்டில் யாருக்கோ கொரோனா, அதற்கான அறிகுறி இருந்தால் பள்ளிக்கு வர அனுமதி கிடையாது.

தனியார் பள்ளிகள் முழு நேரம் வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை. இதனை கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடும். தனியார் பள்ளிகள் அரசின் விதிமுறைகளை மீறி வகுப்புகள் நடத்தினால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளை முழுமையாக திறப்பது குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

மாணவர்களுக்கு இலவசமாக முககவசம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மதிய உணவு வழங்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். மாகி மற்றும் ஏனாம் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அந்த பகுதி மண்டல நிர்வாகிகள் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com