தமிழக-ஆந்திர எல்லையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புச்சுவர் 24 மணிநேரத்தில் இடித்து அகற்றம்

வேலூர் மாவட்டத்தில் தமிழக-ஆந்திர எல்லையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புச்சுவர் 24 மணிநேரத்தில் இடித்து அகற்றப்பட்டது. இதனால் இரு மாநில மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக-ஆந்திர எல்லையில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புச்சுவர் 24 மணிநேரத்தில் இடித்து அகற்றம்
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து ஆந்திர மாநிலம் பலமநேர் செல்லும் சாலையில் சைனகுண்டா உள்ளது. அந்தப் பகுதியில் இருந்து ஒருசில கிலோ மீட்டர் தூரத்தில் ஆந்திர மாநில எல்லை உள்ளது. இதனால் வட மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தமிழக எல்லையான சைனகுண்டாவை கடந்து குடியாத்தம் உள்பட பல்வேறு இடங்களுக்கு செல்கின்றன.

கொரோனா ஊரடங்கு காலத்தில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு ஆந்திராவில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்தன. அதேபோல் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் பலமநேரில் உள்ள தனியார் பால் பண்ணைகளுக்கு தினமும் வாகனங்கள் மூலம் பால் அனுப்பி வந்தனர்.

வேறு வழியில் திருப்பி விடப்பட்டன

கொரோனா தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக பிற மாநில வாகனங்கள் தமிழகத்துக்குள் வருவதை தடுக்க வேலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி இரு மாநில வாகன போக்குவரத்தை முற்றிலும் முடக்கும் வகையில் சைனகுண்டா சோதனைச்சாவடி அருகே குடியாத்தம்-பலமநேர் சாலையின் குறுக்கே நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. ஹாலோபிளாக் கற்களால் 30 அடி நீளம், 4 அடி உயரம், 4 அடி அகலத்துக்கு இந்த தடுப்புச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது.

இதனால் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவந்த அனைத்து லாரிகளும் பலமநேர் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. மேலும் பல வாகனங்கள் பலமநேரில் இருந்து சித்தூருக்கு சென்று அங்கிருந்து காட்பாடி நோக்கி திருப்பி விடப்பட்டன. இதனால் அந்த வாகனங்கள் 60 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்றன.

24 மணி நேரத்தில்

இடித்து அகற்றம்

குடியாத்தம் பகுதியைச் சுற்றி உள்ள பால் உற்பத்தியாளர்கள் நேற்று அதிகாலையில் பாலை சேகரித்து வாகனங்கள் மூலமாக பலமநேருக்கு அனுப்ப வழியில்லாமல் சிரமப்பட்டனர். ஆந்திராவில் இருந்து வாகனங்களில் நோயாளிகள் அவசர சிகிச்சைக்கு கூட வேலூருக்கு வர முடியவில்லை.

இந்தநிலையில் நேற்று மதியம் வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகள் புதிதாக கட்டப்பட்ட தடுப்புச்சுவரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன்பிறகு அந்த சுவரை அகற்ற அவர்கள் உத்தரவிட்டதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணியளவில் திடீரென தடுப்புச்சுவர் பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு இடித்து அகற்றப்பட்டது. கட்டப்பட்ட தடுப்புச்சுவர் 24 மணி நேரத்தில் இடித்து அகற்றப்பட்டதால் இரு மாநில மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் வேலூர் மாவட்டத்தின் மற்றொரு எல்லையான பொன்னை அருகே உள்ள தெங்காலில் சாலையின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்புச்சுவரும் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com