பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வந்த வாலிபரிடம் லஞ்சம்: ஓய்வுபெற்ற தாசில்தார், உதவியாளருக்கு தலா 7 ஆண்டு சிறை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு

தட்கல் முறையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வந்த வாலிபரிடம் ரூ.800 லஞ்சம் வாங்கிய வழக்கில் ஓய்வுபெற்ற தாசில்தார், உதவியாளருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வந்த வாலிபரிடம் லஞ்சம்: ஓய்வுபெற்ற தாசில்தார், உதவியாளருக்கு தலா 7 ஆண்டு சிறை - கடலூர் கோர்ட்டு தீர்ப்பு
Published on

கடலூர்,

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பசுபதி(வயது 34). இவர் வெளிநாடு செல்வதற்காக தட்கல் முறையில் பாஸ்போர்ட்டு பெற விண்ணப்பிக்க வேண்டி சிதம்பரம் தாசில்தாரிடம் கையெழுத்து பெறுவதற்காக சென்றார். இதற்கு தாசில்தார் பட்டுசாமி(65) ரூ.800 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பசுபதி, இது குறித்து கடலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின் பேரில் பசுபதி 800 ரூபாயுடன் தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். அங்கு தாசில்தாரின் உதவியாளர் ராதாகிருஷ்ணனிடம்(61) பணத்தை கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.

தீவிர விசாரணைக்கு பின்னர் தாசில்தார் பட்டுசாமி, அலுவலக ஊழியர் இளையபெருமாள்(65) ஆகியோருக்கும் லஞ்சம் வாங்கியதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேர் மீதும் கடலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த சம்பவம் கடந்த 5.5.2008 அன்று நடைபெற்றது.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் உதவியாளர் ராதாகிருஷ்ணனுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.20 ஆயிரம் அபராதமும், தாசில்தார் பட்டுசாமிக்கு 7 ஆண்டு சிறை ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார். அலுவலக ஊழியர் இளையபெருமாள் விடுதலை செய்யப்பட்டார். சிறைதண்டனை பெற்ற பட்டுசாமியும், ராதாகிருஷ்ணனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com