காசோலை மூலம் லஞ்சம் வாங்கியவர் எடியூரப்பா சித்தராமையா தாக்கு

காசோலை மூலம் லஞ்சம் வாங்கியவர் எடியூரப்பா என்று சித்தராமையா கடுமையாக தாக்கி பேசினார்.
காசோலை மூலம் லஞ்சம் வாங்கியவர் எடியூரப்பா சித்தராமையா தாக்கு
Published on

கொப்பல்,

முதல்மந்திரி சித்தராமையா தனது ஒரு மாத கால சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் பீதரில் தொடங்கினார். நேற்று 2வது நாளாக கொப்பல் மாவட்டத்தில் அவர் சுற்றுப்பயணம் செய்தார். குஷ்டகியில் நடைபெற்ற சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:

நாங்கள் கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஊழலும் செய்யவில்லை. அத்தகைய புகார்கள் எங்கள் அரசு மீது இல்லை. ஆனால் ஊழலை பகிரங்கப்படுத்துவதாக எடியூரப்பா தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் இதுவரை எந்த ஊழலையும் வெளிப்படுத்தவில்லை. பொய் சொல்வதே எடியூரப்பாவுக்கு வேலை.

எடியூரப்பா சிறைக்கு சென்று வந்தவர் என்று நான் சொல்கிறேன். ஆனால் அதற்கு எடியூரப்பா, இந்திரா காந்தியும் ஜெயிலுக்கு சென்றவர் தான் என்று சொல்கிறார். காசோலை மூலம் லஞ்சம் வாங்கி சிறைக்கு சென்றவர் எடியூரப்பா. அவர் மீது 42 ஊழல் வழக்குகள் உள்ளன. முதலில் அவற்றில் இருந்து அவர் வெளியே வரட்டும்.

சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதத்தில் பா.ஜனதாவினர் செயல்படுகிறார்கள். எங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த பா.ஜனதாவினரிடம் எந்த விஷயமும் இல்லை. அதனால் கர்நாடகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த அவர்கள் முயற்சி செய்கிறார்கள். கார்வார் மாவட்டத்தில் இறந்த பரேஸ் மேஸ்கா வழக்கு அவருடைய குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதால் சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து உள்ளோம்.

விசாரணையில் உண்மை வெளியே வரும். நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் கிடையாது. மதங்களை பிரிக்கும் வேலையை நான் செய்வது இல்லை. லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசுக்கு சிபாரிசு செய்யுமாறு கூறியுள்ளனர். நீங்கள் அனைவரும் ஒன்றாக வந்தால் நான் சிபாரிசு செய்வதாக கூறினேன். அவர்கள் ஒற்றுமையாக வரவில்லை.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com