மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் பலி

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் பலி
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜலத்தூரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் அருண்குமார் (வயது 21). இவர் டிப்ளமோ படித்து விட்டு, கோவை ரோடு கோவில்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அருண்குமாரின் உறவினர்கள் அதே பகுதியை சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் வீரன் (38), புரவிபாளையத்தை சேர்ந்த சித்ரவேல் என்பவரது மகன் சந்தோஷ் (19). இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை பாலக்காடு ரோட்டில் அய்யம்பாளையத்தில் இருந்து ஜலத்தூர் நோக்கி 3 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அருண்குமார் ஓட்டினார். பின்னால் வீரனும், சந்தோசும் அமர்ந்து இருந்தனர்.

பொன்னாயூர் சென்றதும், பெட்ரோல் நிரப்புவதற்கு சாலையை கடக்க மோட்டார் சைக்கிளை வலதுபுறமாக அருண்குமார் திருப்பினார். அப்போது பாலக்காட்டில் இருந்து மூணாறு நோக்கி வேகமாக சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் மோட்டார் சைக்கிள் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே வீரன், சந்தோஷ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருண்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் மீது மூணாறில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற மற்றொரு கார் பயங்கரமாக மோதியது. இதில் காரில் வந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அருண்குமாருக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். அருண்குமார், வீரன், சந்தோஷ் ஆகியோரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காட்டை சேர்ந்த சுனில்குமார் (40) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 3 பேரும் ஹெல்மெட் அணியவில்லை. இதனால் தலையில் அடிபட்டு உயிரிழந்து உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கோவில்பாளையம், மாச்சம்பாளையம், சூலூர், சிறுமுகை, காரமடை பொள்ளாச்சி உள்பட கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் நேற்று ஒரே நாளில் 13 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் விபத்து உயிரிழப்புகள் அதிகரித்து இருப்பதை தொடர்ந்து, அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com