

வேடசந்தூர்,
விருதுநகர் மாவட்டம், பூநாதபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணாநந்தம் (வயது 53). இவருடைய மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதியின் மகன் மணிகண்டன், மகள் ஸ்ரீதேவி (17). கிருஷ்ணாநந்தம் விருதுநகரில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். மணிகண்டன் நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகிறார். இவரை பார்ப்பதற்காக கிருஷ்ணாநந்தம், மனைவி மற்றும் மகளுடன் காரில் நாமக்கல்லுக்கு சென்றார். மேலும் அவர்களுடன் ஒரு வாலிபரை அழைத்து சென்றுள்ளனர்.
நாமக்கல் சென்று மணிகண்டனை பார்த்துவிட்டு 3 பேரும் அவருடன் மதிய உணவு சாப்பிட்டனர். இதையடுத்து அங்கிருந்து விருதுநகருக்கு காரில் புறப்பட்டனர். வேடசந்தூர் அருகே உள்ள திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் காக்காத்தோப்பு பிரிவு அருகே கார் வந்து கொண்டு இருந்தது. இந்தநிலையில், திண்டுக்கல்லில் இருந்து தேவிநாயக்கன்பட்டி நோக்கி வந்த தனியார் பஸ் காக்காத்தோப்பு பிரிவில் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூருக்கு செல்வதற்காக கடந்தது.
அப்போது, கிருஷ்ணாநந்தம் குடும்பத்தினர் வந்த கார், தனியார் பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. இந்த விபத்தில் காரில் வந்த 4 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கிருஷ்ணாநந்தம் இறந்தார். இதையடுத்து மற்ற 3 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ்சை ஓட்டி வந்த தொட்டணம்பட்டியை சேர்ந்த பாலசுப்பிரமணி (35) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காரில் வந்த வாலிபர் யார் என்று உடனடியாக தெரியவில்லை.