சென்னை கோயம்பேட்டில் மேம்பாலத்தில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது; உள்ளே இருந்தவர் உடல் கருகி சாவு

சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. உள்ளே இருந்த தச்சுத்தொழிலாளி உடல் கருகி பலியானார். டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்.
சென்னை கோயம்பேட்டில் மேம்பாலத்தில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்தது; உள்ளே இருந்தவர் உடல் கருகி சாவு
Published on

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த மாங்காட்டை சேர்ந்தவர் சுனில்குமார் (வயது 48). கால் டாக்சி டிரைவரான இவர், நேற்று மதியம் வேலப்பன்சாவடியில் இருந்து தச்சுத்தொழிலாளி அர்ஜூனன்(47) என்பவரை தனது காரில் ஏற்றிக்கொண்டு சென்னை சூளைமேடு நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கோயம்பேடு மேம்பாலத்தில் சென்ற கார், வடபழனி செல்லும் 100 அடி சாலையை நோக்கி இறங்கி வந்து கொண்டிருந்தது. திடீரென காரின் பின்பகுதியில் இருந்து குப்பென்று தீப்பிடித்து எரிந்தது. காரின் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த அர்ஜூனன் உடலில் தீப்பிடித்துக் கொண்டது. அந்த தீ டிரைவர் சுனில்குமார் முதுகிலும் பிடித்துக்கொண்டது.

உடனடியாக மேம்பாலத்தில் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய சுனில்குமார், சாலையில் உருண்டு புரண்டு உடலில் எரிந்த தீயை அணைத்தார். இதில் அவரது கை, முதுகில் தீக்காயம் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதற்குள் கார் முற்றிலும் தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தது.

உடல் கருகி சாவு

காருக்குள் இருந்தபடி அர்ஜூனன் அலறினார். அதன்பிறகுதான் அங்கிருந்தவர்களுக்கு, காருக்குள் ஒருவர் மாட்டிக் கொண்டது தெரிந்தது. ஆனாலும் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணன், கோயம்பேடு தீயணைப்பு அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், காரில் எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர். ஆனால் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. அதற்குள் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த அர்ஜூனன் உடல்கருகி பரிதாபமாக இறந்துபோனார். விரைந்து வந்த கோயம்பேடு போலீசார், காருக்குள் இருந்த அர்ஜூனன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

காரின் டிக்கியில் தின்னர் மற்றும் வார்னிஷ் வைத்து இருந்ததால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பலியான அர்ஜூனன், எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com