பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: விவசாயிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் விவசாயிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு: விவசாயிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை
Published on

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா துங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர், மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக வேலை செய்து வந்தார். இவருடைய மகன் திருமாவளவன் (வயது 57). விவசாயி. இவர், அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த 1998-ம் ஆண்டில் ஒருதலையாக காதலித்தார். 20-6-1998 அன்று அந்த பெண் வயல்காட்டில் கரும்பு கட்டும் பணியை முடித்து விட்டு அங்குள்ள குளத்தில் குளித்து விட்டு வந்தார். அப்போது அங்கு வந்த திருமாவளவன், அந்த பெண்ணை வழிமறித்து திருமணம் செய்து கண்கலங்காமல் பார்த்து கொள்வேன் என ஆசை வார்த்தை கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வீட்டிற்கு செல்ல முயற்சித்த போது, வலுக்கட்டாயமாக மூங்கில் புதருக்கு கூட்டி சென்று அவரை திருமாவளவன் பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் இது குறித்து வீட்டில் கூறி அந்த பெண் கதறி அழுதார்.

இதுகுறித்து குன்னம் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் திருமாவளவனை கைது செய்து பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையே ஜாமீனில் வெளியே வந்த திருமாவளவன், வேறொரு பெண்ணை திருமணம் செய்து துபாய்க்கு வேலைக்கு சென்றார். பிறகு பல்வேறு வகையிலும் சமரச தீர்வு காண அவர் முயற்சித்தார். எனினும் அந்த பெண், தன்னை சீரழித்த திருமாவளவனுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதில் தொடர்ந்து நீதித்துறையை நாடி போராடினார்.

அந்த வகையில், நேற்று இந்த வழக்கை விசாரித்த பெரம்பலூர் மகிளா கோர்ட்டு நீதிபதி விஜயகாந்த், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த திருமாவளவனுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 ஆண்டுகள் சாதாரண சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு அரசிடமிருந்து உரிய இழப்பீடு வாங்கி தருவதற்கு நடவடிக்கை எடுக்க சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு கோர்ட்டு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்ரமணியன் உள்பட போலீசார் திருமாவளவனை வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com