

திருச்சி,
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன. கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதாலும், ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் நடத்தப்படுவதாலும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வை எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
ஏற்கனவே 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகளை திறக்கலாம் என்ற அரசு அறிவித்தது. ஆனால் பெற்றோரின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. தற்போது இன்னும் ஒரு சில மாதங்களில் பொதுத் தேர்வு நடக்கவிருப்பதால் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கருத்து கேட்பு கூட்டம்
இதற்காக பெற்றோரிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் நேற்று தொடங்கி 8-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பெற்றோர் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகள் தொடங்குவது குறித்த பெற்றோரிடம் கருத்து கேட்க்கும் கூட்டம் தொடங்கியது. பள்ளிகளில் இருந்து பெற்றோருக்கு எஸ்.எம்.எஸ்.மூலம் தகவல் அனுப்பப்பட்டு பள்ளிகளுக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் பள்ளியில் சமூக விலகல்படி அமரவைக்கப்பட்டு, ஆசிரியர்களால் கருத்து கேட்கப்பட்டு. குறிப்பு எடுக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள் என 538 பள்ளிகளில் கருத்து கேட்பு தொடங்கப்பட்டு விட்டதாக கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பள்ளிகள் திறக்க ஆதரவு
அதே வேளையில் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்-லைன் மூலம் தேர்வு நடப்பதால் நேற்று கருத்து கேட்பு நடத்தப்படவில்லை. திருச்சி சிங்காரத்தோப்பு, பொன்மலைப்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் உள் பள்ளிகளில் நேற்று பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. பெரும்பாலான பெற்றோர் பள்ளிகளை பொங்கல் விடுமுறை முடிந்த பிறகு திறக்கலாம் என்றே கருத்து தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து எஸ்.எஸ்.எல்.சி மாணவியின் தந்தை செல்வம் கூறும்போது, கடந்த 9 மாதங்களாக பள்ளி திறக்கப்படாமல் உள்ளது. தற்போது வகுப்புகள் முழுமையாக ஆன்-லைன் மூலமே நடத்தப்பட்டு வருகிறது. நேரடியாக பள்ளிக்கு சென்று படிப்பதற்கும், ஆன்-லைனில் படிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. தற்போது கொரோனா வீரியம் குறைந்து வருவதால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி பள்ளிகளை திறப்பது நல்லது. அதேவேளை, வகுப்பறையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகம் செய்ய வேண்டும். மாணவர்கள் சமூக விலகலை தொடர்ந்து கடைப்பிடிக்க அறிவுறுத்த வேண்டும் என்றார்.
மாணவர்கள் கருத்து
பள்ளிகள் திறப்பது குறித்து மாணவ- மாணவிகள் தரப்பில் கூறும்போது, கடந்த 9 மாத காலமாக கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வீட்டிலேயே முடங்கி போய் கிடக்கிறோம். எப்போது பள்ளி திறக்கப்படும் என்ற ஆவலில் தான் அனைவரும் உள்ளோம். எனவே, பொதுத்தேர்வு எழுத உள்ள எங்களைப்போன்ற மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு நேரடியாக சென்று படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும். எனவே, பள்ளிகளை திறப்பதுடன் மாணவ- மாணவிகள் நலன் கருதி உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளும், ஒருநாள் விட்டு ஒருநாள் பள்ளிகளை திறந்தால் நலமாக இருக்கும் என்றனர்.
மாணவ, மாணவிகளின் பெற்றோரிடம் பெறப்பட்ட கருத்து மாவட்ட கல்வி அலுவலர் மூலமாக முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு அவை சென்னை தலைமையிடத்துக்கு அனுப்பப்படும். அதன்பின் முறையாக பொங்கலுக்கு பின்னர் பள்ளிகளை திறப்பதா? வேண்டாமா? என்பதை அரசு முடிவு செய்யும்.