அறந்தாங்கி அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய சேதமடைந்த பள்ளி கட்டிடம்

அறந்தாங்கி அருகே சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.
அறந்தாங்கி அருகே சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய சேதமடைந்த பள்ளி கட்டிடம்
Published on

அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், பூவற்றக்குடி ஊராட்சி பூவைமா நகரில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பூவைமா நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 550-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓட்டு கட்டிடங்களில் இயங்கி வந்தது. இந்நிலையில் இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டதை தொடர்ந்து, ஓட்டு கட்டிடத்தில் இயங்கி வந்த வகுப்புகள் அனைத்தும் கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கு மாற்றப்பட்டன.

இதனால் ஓட்டு கட்டிடங்கள் எந்த பயன்பாடும் இன்றி இருந்து வருகிறது.இதில் 10-க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் உள்ளன. இந்த ஓட்டு கட்டிடங்கள் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி தாக்கி புயலில் சேதமடைந்தன. இதனால் அவ்வப்போது இந்த கட்டிடங்களில் இருந்து ஓடுகள் உடைந்து கீழே விழுகின்றன. இந்த கட்டிடத்தின் அருகே அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும் உள்ளது. இந்த பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகள் இந்த ஓட்டு கட்டிடத்தின் அருகே தான் விளையாடி வருகின்றனர். இதனால் உடைந்த ஓடுகள் மாணவ, மாணவிகள் மீது விழுந்து விபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மேலும் இந்த சேதமடைந்த ஓட்டு கட்டிடங்களுக்குள் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் புகுந்து மது அருந்துவது உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் மது அருந்தி விட்டு, மதுபாட்டில்களை அந்த கட்டிடத்திற்குள் உடைத்து போட்டு விட்டும், பிளாஸ்டிக் கப்புகளை அப்படியே விட்டு செல்கின்றனர். இதனால் சேதமடைந்த இந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்து உள்ள பள்ளியின் ஓட்டு கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி அல்லது அரசு தொடக்கப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளை கட்டி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com