சீர்காழி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த பெண் துப்புரவு பணியாளர்: பேஸ்புக்கில் பரவி வரும் காட்சியை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி

சீர்காழி அரசு மருத்துவமனையில் பெண் துப்புரவு பணியாளர், நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதுபோன்ற வீடியோ காட்சி பேஸ்புக்கில் பரவி வருகிறது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சீர்காழி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த பெண் துப்புரவு பணியாளர்: பேஸ்புக்கில் பரவி வரும் காட்சியை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி
Published on

சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 200-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆண்டுக்கு 1500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை நன்கு தரம் உயர்த்தப்பட்டு கண் சிகிச்சை பிரிவு, தீப்புண் சிகிச்சை பிரிவு, பச்சிளம் குழந்தைகளுக்கான நவீன சிகிச்சை பிரிவு, தாய்ப்பால் வங்கி, ரத்த வங்கி உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிப்பட்ட ஒருவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் உள்ள ஆண்கள் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் வேலை செய்து வரும் தனியார் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் சிகிச்சை அளிப்பது போன்ற காட்சியை, நோயாளியை காணவந்த நபர் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பதிவு செய்து பரவ விட்டுள்ளார்.

அந்த வீடியோவில், நோயாளிக்கு பெண் துப்புரவு பணியாளர் நரம்பு ஊசியை போட்டு உடலில் குளுக்கோஸ் செலுத்துவது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. செவிலியர் அல்லது டாக்டர் செய்ய வேண்டிய மருத்துவ உதவியை துப்புரவு பணியாளர் செய்த வீடியோ காட்சி வைரலாக பரவியதால் அதை பார்த்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com